5 கோட்டைகளை இழந்த பா.ஜ., வேட்பாளர் தேர்வே காரணம்
5 கோட்டைகளை இழந்த பா.ஜ., வேட்பாளர் தேர்வே காரணம்
5 கோட்டைகளை இழந்த பா.ஜ., வேட்பாளர் தேர்வே காரணம்
ADDED : ஜூன் 06, 2024 05:15 AM
பெங்களூரு : கர்நாடகாவில் சுலபமாக வெற்றி பெற வேண்டிய ஐந்து தொகுதிகளில், தோல்வியடைந்தது குறித்து பா.ஜ., சுய பரிசோதனை செய்ய துவங்கி உள்ளது.
லோக்சபா தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 17 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த மூன்று லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், இம்முறை தோல்வி அடைந்துஉள்ளனர்.
தோல்வியடைந்த தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும்,கட்சி தலைமை இதை கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டது.
இதனால், தாவணகெரே, பீதர், சிக்கோடி, ராய்ச்சூர், பல்லாரி ஆகிய ஐந்து தொகுதிகளை பறிகொடுத்தது. தாவணகெரேயில், முன்னாள் எம்.பி., சித்தேஸ்வருக்கு கொடுக்காமல், அவரது மனைவி காயத்ரிக்கு சீட் கொடுக்கப்பட்டது.
இதை பலரும் ஏற்கவில்லை. அவருக்கு பதில், வேறு ஒருவருக்கு கொடுத்திருந்தால், மாவட்ட தலைவர்கள் உட்பட அனைவரும் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபட்டிருப்போம் என்றனர்.
பீதரில் முன்னாள் எம்.பி., பகவந்த் கூபாவுக்கு பதில், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு சவுஹானுக்கு கொடுத்திருக்கலாம். எதிர்ப்பு தெரிவித்தவர்களை, கட்சி தலைமை எச்சரித்தது. வேட்பாளரை மாற்றியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.
சிக்கோடியில், பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., அன்னாசாகேப் ஜொல்லேவுக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது.
அவருக்கு பதிலாக முன்னாள் எம்.பி., ரமேஷ் கத்திக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும். இதனால் வெற்றியை இழந்தனர்.
ராய்ச்சூரில் ராஜா அமரேஸ்வர் நாயகாவுக்கு பதிலாக, முன்னாள் எம்.பி., பி.வி.நாயகாவுக்கு சீட் கொடுத்திருக்கலாம். இதனால் காங்கிரசின் குமார் நாயகா வெற்றி பெற்றார்.
பல்லாரியில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பா.ஜ.,வில் இணைந்ததால், கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. ஸ்ரீராமுலு மீது லிங்காயத் சமூகத்தினர் அதிருப்தியில் இருந்தனர்.
வேறு வேட்பாளரை அறிவித்திருந்தால், வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும் என அப்பகுதி பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.