காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு
காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு
காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு
ADDED : ஜூன் 06, 2024 05:14 AM

சிக்கபல்லாபூர் : காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் வீட்டின் மீது, விஷமிகள் கல் வீச்சு நடத்தியதால், பதற்றமான சூழ்நிலை உருவானது.
சட்டசபை தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் காங்கிரசின் பிரதீப் ஈஸ்வர் வெற்றி பெற்ற பின், சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார். குறிப்பாக தன்னிடம் தோற்ற, பா.ஜ.,வின் சுதாகரை கிண்டலாக விமர்சித்தார்.
அவ்வப்போது சவாலுக்கு அழைத்தார். பலமுறை காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்தும், பிரதீப் ஈஸ்வர் பொருட்படுத்தவில்லை.
லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் சுதாகரை, பா.ஜ., வேட்பாளராக அறிவித்த போதும், சட்டசபை தேர்தலை போன்று, லோக்சபா தேர்தலிலும் சுதாகரை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்புவேன்.
காங்., வேட்பாளர் ரக்ஷா ராமையாவை விட, சுதாகர் ஒரு ஓட்டு அதிகம் பெற்றாலும், நான் ராஜினாமா செய்வேன் என, பிரதீப் ஈஸ்வர் சூளுரைத்தார்.
ஆனால் சுதாகர் 1.50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது பிரதீப் ஈஸ்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ராஜினாமா செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதியின் புதிய எம்.பி., சுதாகர், எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் ஆதரவாளர்கள் இடையே, அரசியல் மோதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் பிரதீப் ஈஸ்வர் வீட்டின் மீது, கல் வீச்சு நடந்துள்ளது.
சிக்கபல்லாபூர் நகரின், பி.பி.சாலையை ஒட்டியுள்ள கந்தவாரா சாலையில், சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதில், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.
தகவலறிந்த சிக்கபல்லாபூர் ஊரக போலீசார், நேற்று காலை பிரதீப் ஈஸ்வர் வீட்டுக்கு வந்து, வீட்டின் சுற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
கல் வீச்சு நடத்தியவர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.