அமைச்சர் லட்சுமிக்கு எதிராக சொந்த கட்சியினர் 'கோ பேக்'
அமைச்சர் லட்சுமிக்கு எதிராக சொந்த கட்சியினர் 'கோ பேக்'
அமைச்சர் லட்சுமிக்கு எதிராக சொந்த கட்சியினர் 'கோ பேக்'
ADDED : ஜூன் 06, 2024 05:16 AM

உடுப்பி ; உடுப்பியில் காங்., வேட்பாளர் தோல்விக்கு பொறுப்பு அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் காரணம் என கூறி, 'கோ பேக் ஹெப்பால்கர்' என்ற 'ஹேஸ்டேக்' சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கர்நாடகா அமைச்சரவையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். காங்கிரஸ் ஆட்சியில், உடுப்பி மாவட்ட பொறுப்பு அமைச்சராக லட்சுமி ஹெப்பால்கர் நியமிக்கப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாவட்டத்துக்கு விஜயம் செய்யும் அமைச்சர், பொது மக்கள், தொண்டர்கள் குறைகளை கேட்டு வந்தார்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜ.,வின் கோட்டா சீனிவாச பூஜாரி, காங்கிரசின் ஜெயபிரகாஷ் ஹெக்டே ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல் பிரசாரத்துக்கு வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஒருமுறை கூட ஓட்டு கேட்க லட்சுமி ஹெப்பால்கர் வரவில்லை.
அதேவேளையில், பெலகாவியில் தனது மகன் மிருணாளுக்கு சீட் வாங்கியவர், அவரின் வெற்றிக்காக அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தார். அத்துடன், தென்மேற்கு பட்டதாரி, ஆசிரியர் தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் வரவில்லை.
இதனால், உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியை இழந்ததாக தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர். மார்ச் மாதம் நடந்த வாக்குறுதி மாநாட்டில் பங்கேற்றவர், அதன்பின் வரவே இல்லை என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து, 'கோபேக் லட்சுமி ஹெப்பால்கர்' ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.