ம.பி., அமைச்சர்களின் வருமான வரி இனி மாநில அரசு செலுத்தாது
ம.பி., அமைச்சர்களின் வருமான வரி இனி மாநில அரசு செலுத்தாது
ம.பி., அமைச்சர்களின் வருமான வரி இனி மாநில அரசு செலுத்தாது
ADDED : ஜூன் 26, 2024 01:24 AM
போபால், மத்திய பிரதேசத்தில் அனைத்து அமைச்சர்களும் தங்களின் வருமான வரியை தாங்களே செலுத்தும் வகையில், கடந்த 52 ஆண்டுகால நடைமுறையை மாற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 1972ம் ஆண்டு முதல், அனைத்து அமைச்சர்களின் வருமான வரியை, மாநில அரசே ஏற்று செலுத்தி வருகிறது. இந்த நடைமுறை, தற்போது வரை நீடித்து வருவதால், மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மாநில அமைச்சர்களாக இருப்போர், தங்களின் வருமான வரியை, தாங்களே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
எனவே, 1972ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் எனவும் அமைச்சர்களிடம் முதல்வர் மோகன் யாதவ் கேட்டுக்கொண்டார். அவரது இந்த கோரிக்கையை, அனைத்து அமைச்சர்களும் ஒரு மனதாக ஏற்றனர்.
இதையடுத்து, கடந்த 52 ஆண்டுகால நடைமுறையில் மாற்றம் செய்ய மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இனி, அமைச்சர்களின் வருமான வரியை அரசு செலுத்தாது; அமைச்சர்களே செலுத்த வேண்டும். இதன் வாயிலாக, மாநில அரசுக்கு ஏற்படும் நிதி சுமை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.