ஆம்னி பஸ்கள் மீதான அரசு உத்தரவுக்கு தடை
ஆம்னி பஸ்கள் மீதான அரசு உத்தரவுக்கு தடை
ஆம்னி பஸ்கள் மீதான அரசு உத்தரவுக்கு தடை
ADDED : ஜூன் 26, 2024 01:25 AM
புதுடில்லி, வெளி மாநில பதிவெண் உடைய ஆம்னி பஸ்கள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக போக்குவரத்துச் சட்டப்படி, தமிழக பதிவெண் உடைய ஆம்னி பஸ்கள் தான் தமிழகத்திற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என, வெளிமாநிலங்களின் பதிவெண் உடைய பஸ்களை தமிழகத்தில் இயக்கி வருகின்றனர்.
இந்த விதிமீறலால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதாக கூறி, வெளிமாநில பதிவெண் உடைய ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என, தமிழக போக்குவரத்துத் துறை சமீபத்தில் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் பூயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'தேசிய சுற்றுலா உரிமம் பெற்றிருந்தால், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பஸ்களை தமிழக அதிகாரிகள் தடுக்கக்கூடாது.
எனவே, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 12க்கு ஒத்திவைத்தனர்.