மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க வேண்டுதல் ஆதிசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்
மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க வேண்டுதல் ஆதிசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்
மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க வேண்டுதல் ஆதிசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள்
ADDED : ஜூலை 27, 2024 05:22 AM

பெங்களூரு, : பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்க வேண்டி, மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிசக்தி கோவிலில், சமூக ஆர்வலர்கள் நேற்று சிறப்பு பூஜை செய்தனர்.
பெங்களூரு மாநகராட்சியில் முன்பு 198 வார்டுகள் இருந்தன. பா.ஜ., ஆட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டது. இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, விசாரணையில் உள்ளது. இதனால், 2020 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கவில்லை.
மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் இல்லை. மாநகராட்சியை அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், வார்டுகளின் எண்ணிக்கை 225 ஆக குறைக்கப்பட்டது.
மக்கள் புகார்
கடந்த ஆண்டு டிசம்பரில், மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலை நடத்த, அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பெங்களூரு நகரில் உள்ள, சாலைகளின் நிலைமை தற்போது படுமோசமாக உள்ளது. குப்பைகளும் சரியாக அகற்றப்படுவது இல்லை.
'அதிகாரிகள் மேற்பார்வையில் நடக்கும் எந்த பணிகளும் தரமாக இல்லை. இதனால், மாநகராட்சிக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்' என்று அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். சமூக வலைதளங்களிலும் மாநகராட்சி தேர்தலை நடத்த, பிரசாரம் நடக்கிறது. ஆனால், அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க வேண்டி, மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிசக்தி அம்மன் கோவிலில், தகவல் அறியும் உரிமை ஆய்வு அமைப்பின் சார்பில் நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இந்த பூஜையில், அமைப்பின் நிர்வாகிகள் அமரேஷ், வீரேஷ், நாகேஸ்வர்பாபு, திம்மா ரெட்டி, மல்லிகார்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பூஜை முடிந்த பின், தகவல் அறியும் உரிமை ஆய்வு அமைப்பினர் கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, நான்கு ஆண்டுகள் ஆக போகிறது. மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, கவுன்சிலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
மாநகராட்சி தேர்தலை நடத்த எந்த அரசும் தயாராக இல்லை. 198, 243, 225 என்று வார்டுகளை உருவாக்கினர். இப்போது, 'கிரேட்டர் பெங்களூரு' என்கின்றனர்.
கோரிக்கை
மாநகராட்சியை நிர்வகிக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை சந்திப்பது அரிதாகவே உள்ளது. தேர்தலை நடத்த கோரி, அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை.
ஜனநாயகத்தை காப்பாற்றவும், மக்களின் பிரச்னையை தீர்க்கவும், மாநகராட்சி தேர்தல் நடக்க வேண்டி ஆதிசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.