ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல் நைஜீரியாவை சேர்ந்தவர் கைது
ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல் நைஜீரியாவை சேர்ந்தவர் கைது
ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல் நைஜீரியாவை சேர்ந்தவர் கைது
ADDED : ஜூலை 27, 2024 05:24 AM

பெங்களூரு : பெங்களூரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட, நைஜீரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 கோடி ரூபாய் மதிப்பிலான, எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு ஆப்ரிக்காவின் நைஜீரியாவை சேர்ந்தவர் சுக்வுடும் ஜஸ்டிஸ் என்வபோர், 41. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தொழில் விசாவில் தமிழகத்தின் கோவைக்கு வந்தார். தொழிற்சாலைகளில் இருந்து ஆடைகளை வாங்கி விற்கும் தொழில் செய்தார். ஆனால் தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, பெங்களூரு வந்து எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். பெங்களூரில் தங்கி இருந்து, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும், நைஜீரியாவை சேர்ந்த சிலரின் பழக்கம் கிடைத்தது.
அவர்கள் மூலம் மும்பையில் இருந்து குறைந்த விலைக்கு போதைப்பொருள் வாங்கி, பெங்களூரில் அதிக விலைக்கு விற்று வந்தார். இதுபற்றி சமீபத்தில் சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, சுக்வுடும் ஜஸ்டிஸ் என்வபோர் வசித்த வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து 6 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ எடையுள்ள எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல், 4.40 லட்சம் ரூபாய் ரொக்கம், இரண்டு மொபைல் போன்கள், எடை இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.
சுக்வுடும் ஜஸ்டிஸ் என்வபோர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது.