ADDED : மார் 13, 2025 11:06 PM
குருகிராம்:ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹரியானா மாநிலம் குருகிராமில், கூடுதலாக 62 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, குருகிராம் மாநகரப் போலீசின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு, குருகிராம் மாநகர் முழுதும் கூடுதலாக 62 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மானேசர் ஆகிய நான்கு மண்டலங்களிலும் 37 பொது சோதனைச் சாவடிகளும், 25 போக்குவரத்துப் பிரிவு 25 சோதனைச் சாவடிகளும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்வது, ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுவது, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது ஆகியவற்றுக்கு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடிகளில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் ரகளை செய்வோர் நாள் முழுதும் சிறை வைக்கப்படுவர். மேலும், மாநகர் முழுதும் ரவுடிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சமூக ஊடகங்களும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
வெறுப்பை ஏற்படுத்தும் பதிவுகள் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.