Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆஷா கிரணுக்கு அடிக்கடி வருவேன் முதல்வர் ரேகா பேட்டி

ஆஷா கிரணுக்கு அடிக்கடி வருவேன் முதல்வர் ரேகா பேட்டி

ஆஷா கிரணுக்கு அடிக்கடி வருவேன் முதல்வர் ரேகா பேட்டி

ஆஷா கிரணுக்கு அடிக்கடி வருவேன் முதல்வர் ரேகா பேட்டி

ADDED : மார் 13, 2025 11:06 PM


Google News
புதுடில்லி:டில்லி அரசு நடத்தும் 'ஆஷா கிரண்' ஆதரவற்றோர் காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளுடன் முதல்வர் ரேகா குப்தா நேற்று, ஹோலி பண்டிகை கொண்டாடினார். அப்போது இங்கு வசிப்போரின் பாதுகாவலராக டில்லி அரசு செயல்படும் என அவர் கூறினார்.

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலி பண்டிகை நாடு முழுதும் இன்று கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்கள் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், புதுடில்லி ரோஹிணியில் இயங்கும், ஆஷா கிரண் ஆதரவற்றோர் காப்பகத்துக்கு டில்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வந்தார். அவருடன், சமூக நலத்துறை அமைச்சர் ரவீந்தர் இந்திரராஜ் சிங் மற்றும் அதிகாரிகள் வந்தனர்.

காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு வண்ணப் பொடியை பூசிய முதல்வர் ரேகா அவர்களுடன் உரையாடினார். குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் சாக்லேட்களை வழங்கினார்.

காப்பகம் முழுவதையும் சுற்றிப் பார்த்த முதல்வர், சமையல் அறையில் தயாரித்து வைத்திருந்த உணவு வகைகளை ஆய்வு செய்தார். பின், காப்பகத்தில் வசிப்போரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதன்பின், நிருபர்களிடம் ரேகா கூறியதாவது:

ஆஷா கிரண் காப்பகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இங்கு தங்கியிருப்போர் கேட்டுள்ள வசதிகளை செய்து தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவில் குழந்தைகள் தங்கியுள்ளனர். இந்தக் காப்பகத்தை நிர்வகிக்கும் சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகத்தில் முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர அரசு உறுதியாக உள்ளது.

காப்பக வளாகத்தில் உள்ள பூங்காவை சிறந்த உபகரணங்களுடன் மேம்படுத்த, அமைச்சர் ரவீந்தருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

குழந்தைகள் சிறந்த முறையில் கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்ய இந்தக் காப்பகம் மீது நான் அடிக்கடி இங்கு திடீர் ஆய்வு செய்வேன். அதேபோல, அதிகாரிகளும் அடிக்கடி இங்கு ஆய்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

ஆஷா கிரணில் வசிக்கும் குழந்தைகளுடன் செலவழித்த நேரம் மிகுந்த உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. இங்குள்ள குழந்தைகள் அமைதியான சூழலில் வாழ்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு வசிப்போரின் பாதுகாவலராக டில்லி அரசு செயல்படும். அவர்களின் தேவைகளை சிறப்பாகக் கவனிப்பது அரசின் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us