மாநகர் முழுதும் பலத்த பாதுகாப்பு 'ட்ரோன்' வாயிலாக கண்காணிப்பு
மாநகர் முழுதும் பலத்த பாதுகாப்பு 'ட்ரோன்' வாயிலாக கண்காணிப்பு
மாநகர் முழுதும் பலத்த பாதுகாப்பு 'ட்ரோன்' வாயிலாக கண்காணிப்பு
ADDED : மார் 13, 2025 11:05 PM
புதுடில்லி:ஹோலி பண்டிகை மற்றும் ரம்ஜான் மாத வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை முன்னிட்டு, டில்லி மாநகர் முழுதும் பாதுகாப்பை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹோலி பண்டிகை மற்றும் ரம்ஜான் மாத வெள்ளிக் கிழமை இரண்டும் ஒரெ நாளில் வருவதால், டில்லி மாநகர் முழுதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகரில் 25,000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 300க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த இடங்கள் கண்காணிக்கப்படுகின்றன.
அதேபோல, டில்லியின் 15 காவல் மாவட்டங்களிலும் ரோந்துப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஹோலி கூட்டங்களுக்கு பெயர் பெற்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாவட்டத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க ட்ரோன் வாயிலாக தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வியாபாரிகள் நலச் சங்கங்கள், மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து போலீசாருடன், சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீசாரும் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டுவோர் மற்றும் சிக்னலில் நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென சிறப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹோலி பண்டிகை நாளான இன்று நாள் முழுதும் மாநகர் முழுதும் அனைத்து சாலைகளிலு தீவிர வாகன சோதனை நடத்தப்படும்.
பொதுமக்கள், போலீசுக்கு ஒத்துழைப்பு அளித்து, அமைதியான முறையில் ஹோலி பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.
மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்வது, பைக்கில் சாகசம செய்வது போன்றவற்றுக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரம்ஜான் மாதத்தின் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகை நடப்பதால், அனைத்து மசூதி இமாம்களிடமும் பேச்சு நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.