முதல்வர் மைத்துனரின் போலி பத்திரம் சமூக ஆர்வலர் கங்கராஜு குற்றச்சாட்டு
முதல்வர் மைத்துனரின் போலி பத்திரம் சமூக ஆர்வலர் கங்கராஜு குற்றச்சாட்டு
முதல்வர் மைத்துனரின் போலி பத்திரம் சமூக ஆர்வலர் கங்கராஜு குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 07, 2024 03:23 AM
மைசூரு: ''முதல்வர் சித்தராமையா மனைவியின் அண்ணன், போலியான ஆவணங்களை உருவாக்கி வைத்து கொண்டு, நிலம் தன்னுடையது என்கிறார்,'' என, சமூக ஆர்வலர் கங்கராஜு குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் அண்ணன் மல்லிகார்ஜுன், தற்போது சர்ச்சைக்குரிய நிலத்துக்கு, போலி பத்திரங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு, 'நிலம் தனக்கு சொந்தம்' என, உரிமை கொண்டாடுகிறார்.
மைசூரு நகர வளர்ச்சி ஆணையம், 1996 - 97ல் சர்ச்சைக்குரிய 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இந்த நிலத்தை மேம்படுத்தி, வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்துள்ளது.
ஆனால் இதே நிலத்தை, மல்லிகார்ஜுன், 2004ல் 9.50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது போன்று, போலியான பத்திரங்களை உருவாக்கி உள்ளார்.
இந்த பத்திரங்களை தாக்கல் செய்து, 2005ல் இந்த நிலத்தை, குடியிருப்பு நிலமாக மாற்ற, மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தார். அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்யாமலேயே, நில பரிமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த நிலம் விவசாய நிலம் என்பதை போன்று, பத்திரங்களை தயாரித்துள்ளார். 1997ல் மூடா சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலம், வீட்டு மனைகளாக்கி விற்கப்பட்டது, யாருக்கு விற்கப்பட்டது என்ற ஆவணங்கள் என்னிடம் உள்ளன. வீட்டுமனைகளாக மாற்றப்பட்ட, நிலம் எப்படி விவசாய நிலமாகும்?
இவ்வாறு அவர் கூறினார்.