மகளின் நினைவில் தொண்டு செய்யும் தந்தை
மகளின் நினைவில் தொண்டு செய்யும் தந்தை
மகளின் நினைவில் தொண்டு செய்யும் தந்தை
ADDED : ஜூலை 07, 2024 03:25 AM

சோகத்தில் மிகப்பெரிய சோகம், புத்திர சோகம் என்பர். பெற்ற மகளை தீ விபத்தில் பறிகொடுத்த தந்தை, மற்ற குழந்தைகளுக்கு உதவுவதன் மூலம், தன் மகளை கண்டுவருகிறார். இவரது சேவை பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது.
பெங்களூரின் சிவாஜிநகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏ.எஸ்.ஐ.,யாக பணியாற்றுபவர் லோகேஷப்பா, 40. இவர் 2019ல் கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றினார். சிவாஜிநகரின் போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்.
எமனான தீ
இவரது மகள் ஹர்ஷாலி, 3. இவர் 2019 மார்ச் 5ல் தன் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டருகில் குவிந்து கிடந்த குப்பையில் தீப்பிடித்ததில், அங்கு விளையாடிய ஹர்ஷா மீது தீப்பற்றியது.
இதை பார்த்த தாய் சுதாமணி, உடனடியாக தன் கணவர் லோகேஷப்பாவை தொடர்பு கொண்டு, நடந்ததை கூறினார். மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மகள், மார்ச் 13ல் உயிரிழந்தார்.
மகளை இழந்து லோகேஷப்பா துயரத்தில் ஆழ்ந்தார். மற்ற குழந்தைகளின் முகத்தில், தன் மகளை பார்க்க துவங்கினார்.
ஆண்டுதோறும் தன் இரண்டு மாத ஊதியத்தை, ஏழை சிறார்களின் நலனுக்காக ஒதுக்கி உள்ளார்.
தன் இளம்வயதில் வறுமையில் கஷ்டப்பட்டார். எனவே அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளை, தேர்வு செய்து, அங்கு வசிக்கும் ஏழை சிறார்களின் கல்விக்கு தேவையான, அனைத்து வசதிகளையும் செய்கிறார்.
தற்போது பெங்களூரின் கொடிகேஹள்ளி, ஹாசனின் நான்கு பள்ளிகள், மைசூரில் ஒரு பள்ளியை தத்தெடுத்துள்ளார். இப்பள்ளிகளில் படிக்கும் 200 மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உட்பட, தேவையான உதவிகளை செய்துள்ளார்.
புதிய அறக்கட்டளை
இவரது மனைவி சுதாராணி, தான் பார்த்து வந்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு, தங்கள் மகளின் பெயரில் 'ஹர்ஷாலி' என்ற, அறக்கட்டளை துவக்க முடிவு செய்துள்ளார்.
விரைவில் அறக்கட்டளையை பதிவு செய்து, தொலைவில் உள்ள பகுதிகளில் படிக்கும், ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், கல்விக்கு தேவையான பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளார்.
மகளை இழந்த துயரத்தை மறந்து, ஏழை சிறார்களுக்கு உதவுவதன் மூலம், அர்த்தமுடைய வாழ்க்கை வாழ்கின்றனர்.
- நமது நிருபர் -