ஒக்கலிகர் தலைவர்களுக்கு சிவகுமார் திடீர் விருந்து
ஒக்கலிகர் தலைவர்களுக்கு சிவகுமார் திடீர் விருந்து
ஒக்கலிகர் தலைவர்களுக்கு சிவகுமார் திடீர் விருந்து
ADDED : ஜூன் 14, 2024 07:52 AM

பெங்களூரு: தன் பலத்தை காட்டும் வகையில், ஒக்கலிக சமுதாய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு துணை முதல்வர் சிவகுமார் நேற்று விருந்து வைத்தார்.
லோக்சபா தேர்தலில் ஒக்கலிகர்கள் அதிகமாக உள்ள பழைய மைசூரு மண்டலத்தில், காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
குறிப்பாக, மைசூரு, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, சிக்கபல்லாப்பூர், மாண்டியா ஆகிய தொகுதிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
வெற்றி கிடைத்திருந்தால், தன் செல்வாக்கை உயர்த்தி கொண்டு, தன்னை அடுத்த ஒக்கலிகர் தலைவராக வலம் வருவதற்கு துணை முதல்வர் சிவகுமார் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது விருப்பம் பொய்த்து போனது.
தற்போது, மாண்டியாவில் வெற்றி பெற்ற ம.ஜ.த.,வின் குமாரசாமி, மத்திய அரசில் கனரக தொழில்துறை அமைச்சராக இருக்கிறார்.
இவர், தங்கள் மீது விரோத அரசியல் செய்து, ஒக்கலிகர் தலைவராக வலம் வர திட்டமிட்டுள்ளதாக சிவகுமார் கருதுகிறார்.
இந்நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தன் தம்பி சுரேஷ் வீட்டில், காங்கிரசின் ஒக்கலிகர் சமுதாய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு நேற்று இரவு, சிவகுமார் விருந்து வைத்தார்.
அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, கிருஷ்ணபைரே கவுடா, செலுவராயசாமி, வெங்கடேஷ், எம்.சி.சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
விருந்து என்ற பேரில், அரசியல் ரீதியாக தன் பலத்தை காட்ட துணை முதல்வர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.