தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு
தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு
தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு
ADDED : ஜூலை 24, 2024 01:36 AM
மத்திய பட்ஜெட்டில், உள்நாட்டில் மேம்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், தங்கம், வெள்ளி, முக்கிய கனிமங்கள், மொபைல்போன் உள்ளிட்டவற்றுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி, முக்கிய கனிமங்கள் ஆகியவற்றை மூலப் பொருட்களாக வைத்து பல்வேறு பொருட்கள் தயாரிப்பது, அவற்றை மேம்படுத்துவது ஆகியவற்றின் வாயிலாக, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், இவற்றின் மீதான சுங்க வரி, மத்திய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது.
ஷியா கொட்டை, இறால் உள்ளிட்ட மீன்களுக்கான உணவுகள், கான்சர் மருந்துகள், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள், ஜவுளி, ஸ்டீல், காப்பர், மருத்துவ உபகரங்கள், காலணி தயாரிப்பு பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டிகள் ஆகியவற்றுக்கான சுங்க வரி, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி ஆபரணங்களுக்கான சிறிய வடிவிலான பொருட்களுக்கு 14.35 சதவீதத்தில் இருந்து 5.35 சதவீதமாக குறைப்பு. பிளாட்டினம், பலாடியம், ஓஸ்மியம், ருத்தேனியம், இரிடியம் போன்ற விலையுயர்ந்த பொருட்களுக்கான வரி, 15.4 சதவீதத்தில் இருந்து, 6.4 சதவீதமாக குறைப்பு.
உள்நாட்டில் மொபைல்போன் தயாரிப்பு மூன்று மடங்கும், ஏற்றுமதி, 100 மடங்கும், கடந்த ஆறு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. இதனால், மொபைல்போன்கள், சார்ஜர்களுக்கான சுங்க வரி, 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அதுபோல, பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும், கோபால்ட், லித்தியம், நிக்கல் உள்ளிட்ட, 25 முக்கிய கனிமங்களுக்கான வரி முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில் சோலார் மின்சக்திக்கு பயன்படுத்தப்படும் பேனல்களுக்கான மூலப்பொருட்களுக்கான சுங்க வரிச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.