UPDATED : ஜூலை 24, 2024 03:39 AM
ADDED : ஜூலை 24, 2024 01:35 AM

பட்ஜெட்டில், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், வருமான வரியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் வரிக் கணக்கு தாக்கல் செய்வோருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
பழைய வரி விதிப்பு முறையில் எந்த மாற்றமும் கிடையாது.
தற்போது வருமான வரிக் கணக்கை இரண்டு முறைகளில் தாக்கல் செய்ய முடியும். பழைய வரி விதிப்புமுறையின்படி, பல்வேறு முதலீடுகளுக்கு வரிச் சலுகைகளை பெற முடியும்.
அதே நேரத்தில் அந்த நடைமுறையில், ஒவ்வொரு 'ஸ்லாப்' எனப்படும் வரி அடுக்கிலும் விதிக்கப்படும் வரி விகிதம் அதிகமாகும்.
ஆனால், புதிய வரி விதிப்பு முறையில் வரி அடுக்கும் அதிகமாக இருக்கும். வரி விகிதமும் குறைவு. அதே நேரத்தில் இதில், வரிச் சலுகைகளை கோர முடியாது.
கடந்த நிதியாண்டில், 8.61 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில், மூன்றில் இரண்டு பங்கினர், புதிய வரிவிதிப்பு முறையின் கீழே கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தற்போதைய நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விகிதத்தில் சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவை, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் கணக்கு தாக்கல் செய்வோருக்கு மட்டும் கிடைக்கும்.
இதன்படி, நிரந்தர வரிக்கழிவு, 50,000 ரூபாயில் இருந்து, 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல, ஓய்வூதியதாரர்களுக்கான நிரந்தர வரிக்கழிவு, 15,000 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரிச் சலுகைகளால், நான்கு கோடி சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், 17,500 ரூபாய் வரை சேமிக்க முடியும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்த புதிய சலுகைகள், நடப்பு நிதியாண்டு வரி கணக்கு ஆண்டுக்கு பொருந்தும்.