Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பீஹார், ஆந்திராவுக்கு தாராளம்

பீஹார், ஆந்திராவுக்கு தாராளம்

பீஹார், ஆந்திராவுக்கு தாராளம்

பீஹார், ஆந்திராவுக்கு தாராளம்

UPDATED : ஜூலை 24, 2024 04:40 AMADDED : ஜூலை 24, 2024 01:38 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், பீஹார், ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

லோக்சபாவுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.

இதில், 16 எம்.பி.,க்கள் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் 12 எம்.பி.,க்கள் உள்ள பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை மிக முக்கியமான கட்சிகள். இந்த மாநிலங்களின் கூட்டணி அரசில் பா.ஜ.,வும் இடம்பெற்றுள்ளது.

மிகவும் பின்தங்கியுள்ள பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என, ஐக்கிய ஜனதா தளம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

கடந்த, 2014ல் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று, பார்லிமென்டில் நேற்று முன்தினம் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பட்ஜெட்டில் இந்த மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன.

அதன்படி, கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில், சில முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, பீஹார் மற்றும் ஆந்திராவுக்கு, சர்வதேச நிதி அமைப்புகள் வாயிலாக கடன்கள் வாங்கித் தருவது விரைவுபடுத்தப்படும் என, கூறப்பட்டுஉள்ளது.

இதைத் தவிர, பீஹாரில், 26,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம், மருத்துவ கல்லுாரி, விளையாட்டு கட்டமைப்புகளும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் அடங்கிய, 'பூர்வோதயா' பிராந்தியத்துக்கு, அனைத்து தரப்பு வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பையும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பிராந்தியத்தில், புதிதாக தொழில் பெருவழிப் பாதையும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் உள்ளது.

ஆந்திராவின் அமராவதியில், மாநில தலைநகர் அமைப்பதற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு பட்ஜெட்டில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்து வரும் பட்ஜெட்களில் கூடுதல் தொகை ஒதுக்கப்படும் என்றும், நீண்ட கால கோரிக்கையான போலாவரம் பாசன திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, தேவையான நிதியுதவி செய்யப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us