'மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார்'
'மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார்'
'மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார்'
UPDATED : ஜூலை 30, 2024 05:45 AM
ADDED : ஜூலை 30, 2024 02:33 AM

பெங்களூரு, “கடலில் கலக்கும் கூடுதல் நீரை சேமித்து வைப்பதற்காகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். அணை கட்டுவது எங்கள் உரிமை. கட்டியே தீருவோம். இது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார்,” என, கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கபிலா, காவிரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன.
இரண்டு அணைகளில் இருந்தும், வினாடிக்கு 68,845 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், கபினி அணை நீர் முழுதும் தமிழகத்துக்குச் செல்கிறது.
அணைகள் நிரம்பும்போது, கர்நாடக அரசு சார்பில், மங்கள பொருட்களுடன் சீர்வரிசை சமர்ப்பிப்பது வழக்கம். மன்னர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில், கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி ஆகிய இரண்டு அணைகளுக்கும், கர்நாடக அரசு சார்பில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர், முறங்களில் மங்கள பொருட்களுடன் நேற்று சீர்வரிசை சமர்ப்பணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சாதாரண மழை ஆண்டில், அணைகள் நிரம்பும்பட்சத்தில், ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி., நீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும்.
ஆனால், 2022 - 23ல், 665 டி.எம்.சி., நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தாண்டு, இதுவரை 83 டி.எம்.சி., நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் அதிகமாக திறந்துவிடப்படும். ஆனால், கஷ்ட காலத்தில்குறிப்பிட்ட நீர் திறந்துவிட முடியாது.
கடலில் கலக்கும் கூடுதல் நீரை சேமித்து வைப்பதற்காகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். அணை கட்டுவது எங்கள் உரிமை. கட்டியே தீருவோம். இது குறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்த தயார்.
இதனால், கர்நாடகாவை விட தமிழகத்துக்கு தான் அதிக பயன் உள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை. மாண்டியா எம்.பி., குமாரசாமி அனுமதி பெற்றுத் தந்தால், 65 டி.எம்.சி., நீரை சேமித்து வைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.