உச்ச நீதிமன்றத்தில் கேமரா முன் துவங்கியது லோக் அதாலத்
உச்ச நீதிமன்றத்தில் கேமரா முன் துவங்கியது லோக் அதாலத்
உச்ச நீதிமன்றத்தில் கேமரா முன் துவங்கியது லோக் அதாலத்
ADDED : ஜூலை 30, 2024 02:32 AM

புதுடில்லி, உச்ச நீதிமன்றத்தில் முதன்முறையாக, நீதிமன்றத்தின் முதல் ஏழு அமர்வுகள், 'ஸ்பெஷல் லோக் அதாலத்' எனப்படும் சிறப்பு மக்கள் நீதிமன்றம், ஊடக கேமரா முன்னிலையில் நேற்று முதல் விசாரணையை துவங்கியது.
உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமரச தீர்வு
இதன் ஒரு பகுதியாக, ஜூலை 29 முதல் ஆக., 3 வரையில், உச்ச நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் என்ற சிறப்பு லோக் அதாலத் கூடுகிறது.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் இடையே சமரச தீர்வு ஏற்படுத்தவும், நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு சில பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காணவும், விரைவாக நீதி கிடைக்கவும் இது உதவும்.
நீதிமன்றத்தின் முதல் ஏழு அமர்வுகள், நேற்று மதியம் 2:00 மணி முதல் விசாரணையை துவங்கியது. இதை நேரடியாக படம் பிடிக்க, ஊடக கேமராக்கள் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டன.
இது குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:
ஆக., 3 வரை உச்ச நீதிமன்றத்தின் ஏழு அமர்வுகள், சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கும்.
ஒரு வாரம்
மனுதாரர்களும், வழக்கறிஞர்களும் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளில் விரைவில் தீர்வு காண, இந்த அமர்வுகளை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் 80,000 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்கத்தில் இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம், ஒரு வார கால விசாரணையை துவங்கிஉள்ளது.