ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்துவோம் 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் வேண்டுகோள்
ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்துவோம் 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் வேண்டுகோள்
ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்துவோம் 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் வேண்டுகோள்
ADDED : ஜூலை 28, 2024 11:28 PM

புதுடில்லி: “நம் மூவர்ண கொடியை உலக அரங்கில் பறக்கவிட, நம் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்றுள்ள நம் வீரர்களை உற்சாகப்படுத்துவோம்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும், 'மன் கீ பாத்' நிகழ்ச்சியின், 112வது அத்தியாயம் நேற்று ஒலிபரப்பானது.
பிரமிடு சின்னங்கள்
இதில், பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்:
உலகின் ஒட்டுமொத்த கவனமும் பாரிஸ் பக்கம் திரும்பி உள்ளது. உலக அரங்கில் நம் மூவர்ண கொடியை பறக்கவிட நம் விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நம் வீரர்களை நீங்களும் உற்சாகப்படுத்த வேண்டும். தேசத்துக்காக உற்சாக குரல் எழுப்புவோம்
அசாமின் அஹோம் மன்னர்கள் மற்றும் ராணிகளை புதைத்துள்ள சராய்தியோ மொய்தாம், எகிப்தின் பிரமிடு சின்னங்களுக்கு இணையானது.
இது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இருந்து யுனெஸ்கோ பட்டியலில் இணைந்த 43வது இடமாகவும், வடகிழக்கில் இருந்து இணைந்த முதல் இடம் என்ற பெருமையையும் மொய்தாம் பெற்றுள்ளது.
போதை பொருட்களுக்கு எதிரான, 'மனஸ்' என்ற சிறப்பு மையத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது. 1933 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு போதை மறுவாழ்வு குறித்த உதவிகளையும் தகவல்களையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
காதி விற்பனை முதல் முறையாக 400 சதவீதம் அதிகரித்துள்ளது. காதி கிராம தொழில்களின் மொத்த விற்பனை 1.5 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது. பெண்கள் அதிக அளவில் பயன்பெற்றுள்ளனர்.
கைத்தறி துணி
தேசிய கைத்தறி தினத்தை ஆக., 7ல் கொண்டாட உள்ளோம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கைத்தறி துணிகள் மக்களின் பேராதரவை பெற்று வருகின்றன. பல தனியார் நிறுவனங்களும் கைத்தறி ஆடைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க துவங்கியுள்ளன.
ஒரு நாடு, அதன் கலாசாரத்தில் பெருமை கொள்வதன் வாயிலாக மட்டுமே முன்னேற முடியும். அந்த வகையில் நம் நாட்டில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதில், 'பாரி' திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
'இந்திய மக்களின் கலை' என்பதன் சுருக்கம் தான் பாரி என்று அழைக்கப்படுகிறது. டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாடு முழுதும் உள்ள கலைஞர்களின் திறமைகளை நாம் காண முடியும்
ஹரியானாவின் ரோடக் மாவட்டம், ஆடைகளில் 'பிளாக்' அச்சு மற்றும் வண்ணம் சேர்க்கும் பணிகளுக்கு புகழ் பெற்றது. இங்குள்ள திறமை வாயந்த பெண்கள், தங்கள் மயக்கும் வண்ணங்களால் ஆடைகளுக்கு வண்ணம் பூசி வருகின்றனர்.
இது அம்மாவட்டத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியுள்ளது.
இவ்வாறு பிரதமரின் பேச்சில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலோசனை
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேச வேண்டிய மக்கள் பிரச்னைகள் குறித்து ஆலோசனைகள் அளிக்கும்படி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். 4,246 ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருந்தன. இதில் இருந்து பல்வேறு விஷயங்களை எடுத்து பேசியுள்ளதாக பிரதமர் தன் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், https://mygov.in/group-issue/ மற்றும் நமோ செயலி வாயிலாகவும், 1800 -11-7 800 என்ற எண்ணில் அழைத்து குரல் பதிவு வாயிலாகவும் தங்கள் ஆலோசனைகளை தொடர்ந்து அளிக்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.