ADDED : ஜூன் 06, 2024 06:13 AM

புதுடில்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மரக்கன்று நட்டதுடன், 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.
டில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில், அரச மரக்கன்றை பிரதமர் மோடி நட்டார். இந்த இயக்கத்தின் வாயிலாக, நாடு முழுதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள தாவது:
உலக சுற்றுச்சூழல் தினத்தில், 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கத்தை துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் எதிர்காலங்களில் மரக்கன்றை நடுமாறு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் அவ்வாறு ஈடுபட்டது தொடர்பான புகைப்படத்தை #Plant4Mother என்ற, 'ஹேஷ்டேக்'கின் கீழ் சமூக வலைதளத்தில் பகிரவும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.