'ஜனநாயகத்தில் நீதித்துறை பங்களிப்பு மதிப்பற்றது': உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
'ஜனநாயகத்தில் நீதித்துறை பங்களிப்பு மதிப்பற்றது': உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
'ஜனநாயகத்தில் நீதித்துறை பங்களிப்பு மதிப்பற்றது': உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
ADDED : ஜூன் 06, 2024 06:40 AM

ஆக்ஸ்போர்டு: ''தேர்தல்கள் என்பது இந்தியாவின் அரசியல் அமைப்பு ஜனநாயகத்தை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் நீதிபதிகள், அரசியலமைப்பு மாண்புகள் தொடர்வதையும், அது பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்கின்றனர்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலையின் மாணவர் விவாத அமைப்பான ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நடத்திய நிகழ்ச்சியில், நம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல்கள் என்பது, அரசியலமைப்பு ஜனநாயகத்தை பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில், சில காரணங்களால், நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவதில்லை. நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்புகள் தொடரப்படுவதையும், அது பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்கின்றனர்.
ஜனநாயகத்தில், நீதித்துறை முக்கிய பங்களிப்பை அளிக்கிறது. மிகச் சிறந்த சமூகத்தை உருவாக்குவதிலும், அது பாதுகாக்கப்படுவதிலும், ஜனநாயகத்தில், நீதித்துறையின் பங்கு உள்ளது.
கடந்த, 24 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்துள்ளேன். ஆனால், எந்த ஒரு அரசியல் நெருக்கடியையும் சந்தித்ததில்லை. அரசியலில் இருந்தும், அரசிடம் இருந்தும், நீதித்துறை விலகியே உள்ளது.
அதே நேரத்தில், ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கும்போது, அதனால், சமூகத்தில், அரசியலில், அரசில் ஏற்படக் கூடிய தாக்கங்களை நாங்கள் பார்க்க வேண்டும். அதற்காக நாங்கள் அரசியலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறக் கூடாது.
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமண அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தனிப்பட்ட முறையில், அதை நான் ஆதரிக்கிறேன்.
அதே நேரத்தில், இது தொடர்பான வழக்கின் தீர்ப்பின்போது, அதனால், சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கம், அரசு நிர்வாகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை கவனிக்க வேண்டியிருந்தது.
மேலும், இது தொடர்பாக சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நாங்கள் கவனிக்க வேண்டிஉள்ளது. அதனால், சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்தோம். அதே நேரத்தில், இது தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் பார்லிமென்டுக்கே உள்ளது என்பதை குறிப்பிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.