மனதளவில் அமைதி தரும் யோகா கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
மனதளவில் அமைதி தரும் யோகா கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
மனதளவில் அமைதி தரும் யோகா கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
ADDED : ஜூன் 22, 2024 04:46 AM
பெங்களூரு : ''யோகா செய்வது மனதளவிலும், உடல் அளவிலும் பலத்தை அதிகரித்து, அமைதியை ஏற்படுத்துகிறது. அனைவரும் தினமும் யோகா செய்யுங்கள்,'' என, கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.
சர்வதேச யோகா தினம், உலகம் முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில், மாநில ஆயுஷ் மற்றும் சுகாதார துறை சார்பில், பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், துணை முதல்வர் சிவகுமார், சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உட்பட ஏராளமானோர் யோகாவில் ஈடுபட்டனர்.
பின், கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:
சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த மாநாட்டில், யோகாவின் சிறப்புகள் குறித்து விளக்கி, அறிமுகம் செய்தார். கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி, ஐ.நா., சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைவரும் யோகா செய்யுங்கள் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இதை, 172 நாடுகள் ஏற்று கொண்டன. அதன்பின், ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, நமக்காகவும், சமூகத்திற்காகவும் என்ற கரு பொருளுடன் யோகா செய்யப்பட்டது. யோகா என்பது மனிதனை, சுகாதாரமாகவும், சமூக சேவையிலும் ஈடுபட வைக்கிறது.
குறிப்பாக, மனதளவிலும், உடல் அளவிலும் பலத்தை அதிகரித்து, அமைதியை ஏற்படுத்துகிறது. கர்நாடகாவை யோகாவில் சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு மாநில அரசு முயற்சித்து வருகிறது.
நானும் தினமும் யோகா, பிரணாயாமம் செய்து வருகிறேன். இதன் மூலம் ஒரு விதமான உணர்வை அனுபவிக்கிறேன். நீங்கள் அனைவரும் தினமும் யோகா செய்து, அதன் மகத்துவத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.