ஐகோர்ட் உத்தரவை மீறிய பதஞ்சலி ரூ.50 லட்சம் டிபாசிட் செய்ய ஆணை
ஐகோர்ட் உத்தரவை மீறிய பதஞ்சலி ரூ.50 லட்சம் டிபாசிட் செய்ய ஆணை
ஐகோர்ட் உத்தரவை மீறிய பதஞ்சலி ரூ.50 லட்சம் டிபாசிட் செய்ய ஆணை
ADDED : ஜூலை 11, 2024 01:50 AM

மும்பை,காப்புரிமை மீறல் வழக்கில், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறியதற்காக, 50 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யும்படி, 'பதஞ்சலி' ஆயுர்வேத நிறுவனத்துக்கு, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இதன் நிர்வாக இயக்குனராக ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும், இணை நிறுவனராக யோகா குரு ராம்தேவும் உள்ளனர்.
இடைக்கால தடை
தங்களது கற்பூரப் பொருட்களின் காப்புரிமையை பதஞ்சலி மீறுவதாகக் கூறி, 'மங்களம் ஆர்கானிக்ஸ்' என்ற நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2023 ஆக., 30ல், கற்பூரப் பொருட்களை விற்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ, பதஞ்சலி நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
எனினும், இந்த தடையை மீறி, கற்பூரப் பொருட்களை பதஞ்சலி விற்பனை செய்து வந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த மங்களம் ஆர்கானிக்ஸ் நிறுவனம், நீதிமன்ற உத்தரவை மீறி, கற்பூரப் பொருட்களை பதஞ்சலி தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த விவகாரத்தில், கடந்த ஜூனில் பதஞ்சலி இயக்குனர் ரஜ்னீஷ் மிஸ்ரா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும், தடை உத்தரவுக்குப் பின், 49.58 லட்சம் ரூபாய் மதிப்பில் கற்பூரப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒத்திவைப்பு
இந்நிலையில் இந்த வழக்கு, மும்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆர்.ஐ.சாக்லா அமர்வு முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கூறியதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதை பதஞ்சலி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக, நீதிமன்ற உத்தரவை பதஞ்சலி மீறி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன், 50 லட்சம் ரூபாயை பதஞ்சலி நிறுவனம் டிபாசிட் செய்ய வேண்டும். வழக்கு, வரும் 19க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில், ஏற்கனவே பதஞ்சலி நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.