வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு: காங்., எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் ரெய்டு
வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு: காங்., எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் ரெய்டு
வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு: காங்., எம்.எல்.ஏ.,க்கள் வீடுகளில் ரெய்டு
ADDED : ஜூலை 11, 2024 02:09 AM

பெங்களூரு : வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், பல்லாரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான நாகேந்திரா, ராய்ச்சூர் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அவர்களின் ஆதரவாளர்கள் வீடுகளும் தப்பவில்லை.
பெங்களூரு, பல்லாரி, ராய்ச்சூர், ஹைதராபாத் உள்ளிட்ட 18 இடங்களில் சோதனை நடந்தது. நாகேந்திராவின் தனி உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, வசந்த் நகரில் கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையம் உள்ளது. இங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகர், 52. கடந்த மே 27ம் தேதி, ஷிவமொகாவில் உள்ள தன் வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 187 கோடி ரூபாயில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தால் நாகேந்திரா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அரசு ஒதுக்கிய நிதி, முறைகேடாக மாற்றப்பட்டது குறித்து, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
முறைகேடு தொடர்பாக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கர் பரசுராம், ஹைதராபாத் கூட்டுறவு சங்கத் தலைவர் சத்யநாராயணா உட்பட சிலரை, சி.ஐ.டி., கைது செய்துஇருந்தது.
இதற்கிடையில், யூனியன் வங்கியின் வால்மீகி மேம்பாட்டு ஆணைய வங்கிக்கணக்கில் இருந்து ஹைதராபாதில் உள்ள பல தனியார் நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளுக்கு 94 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில், வங்கி ஊழியர்களின் தொடர்பு குறித்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,யில் யூனியன் வங்கியின் பெங்களூரு மண்டல மேலாளர் மகேஷ் புகார் செய்தார்.
வங்கியின் மேலாளர் சுஷ்மிதா ரவுல், துணை மேலாளர் தீபா, கடன் வழங்கும் பிரிவின் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கருதிய சி.பி.ஐ., அது குறித்த தகவல்களை அமலாக்கத் துறையிடம் கூறியிருந்தது.
மொபைல் போன்கள்
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பல்லாரி டவுன் நேரு காலனியில் உள்ள, முன்னாள் அமைச்சர் நாகேந்திராவின் வீட்டிற்குச் சென்றனர்.
குடும்பத்தினருடன் நாகேந்திரா பெங்களூரில் வசித்து வருவதால், அந்த வீட்டில் வேலையாட்கள் மட்டும் இருந்தனர்.
அமலாக்கத் துறையினர் சோதனையை துவக்கினர். வீட்டிற்கு எதிரே நாகேந்திராவின் எம்.எல்.ஏ., அலுவலகமும் உள்ளது. அங்கேயும் சோதனை நடத்தப்பட்டது.
மற்றொரு குழுவினர், பெங்களூரு டாலர்ஸ் காலனியில் நாகேந்திரா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு, நேற்று காலை 7:00 மணிக்குச் சென்றனர்.
வீட்டின் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த இரண்டு மொபைல் போன்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அமலாக்கத் துறையினரின் இன்னொரு குழுவினர், பெங்களூரு பி.இ.எல்., ரோட்டில் உள்ள, நாகேந்திராவுக்கு சொந்தமான இரண்டு பிளாட்டுகளில் சோதனை நடத்தினர்.நேற்று மாலையில், பல்லாரியில் வசிக்கும் நாகேந்திராவின் ஆதரவாளர்கள் நான்கு பேர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதுபோன்று, எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தலின் ராய்ச்சூர் ஆஷாபுராவில் உள்ள வீடு, பெங்களூரு எலஹங்கா சீனிவாசபுராவில் உள்ள வீடுகளிலும், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சீனிவாசபுராவில் உள்ள வீட்டிலிருந்த தத்தலை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் பெங்களூரில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பவனுக்கு சென்ற அமலாக்கத் துறையினர், நாகேந்திரா, தத்தலுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளிலும் சோதனை நடத்தினர். எம்.எல்.ஏ., பவன் ஊழியர்களிடம், எம்.எல்.ஏ.,க்களை தவிர, வேறு யார் வருவர் என்று விசாரணை நடத்தி தகவல் பெற்றனர்.
அதன் பின்னர், வசந்த் நகரில் உள்ள கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்தது. ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
இதுபோல ஹைதராபாதில் உள்ள சத்யநாராயணா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஒட்டுமொத்தமாக பெங்களூரு, பல்லாரி, ஹைதராபாத், ராய்ச்சூரில் 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது, பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
கைது
நேற்று மாலை நாகேந்திராவின் தனி உதவியாளர் ஹரிஷ் கைது செய்யப்பட்டார். அவரை பெங்களூரு சாந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர் நாகேந்திரா பெயரை கூறினால், நாகேந்திராவை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது.