பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு நிராகரிப்பு
பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு நிராகரிப்பு
பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனு நிராகரிப்பு
ADDED : ஜூன் 13, 2024 01:42 AM
புதுடில்லி, டில்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் துாக்கு தண்டனை பெற்று கடந்த 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது ஆரிப்பின் கருணை மனுவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டாவது முறையாக நேற்று நிராகரித்தார்.
டில்லி செங்கோட்டைக்குள் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆரிப் என்பவர், பிற பயங்கரவாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை 2000ம் ஆண்டு, டிசம்பர் 26ல் டில்லி போலீசார் கைது செய்தனர். தாக்குதலில் தொடர்புடைய மற்ற மூவர், போலீசாரின் என்கவுன்டரில் அப்போதே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 2005ல் ஆரிப்பை குற்றவாளி என தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆரிப் அளித்த மறு சீராய்வு மனுவும், 2022ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து துாக்கு தண்டனையை ரத்து செய்யும் படி ஜனாதிபதிக்கு கடந்த ஆண்டு கருணை மனு அளித்தார். அது ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மே மாதம் மீண்டும் ஒரு கருணை அனுப்பப்பட்டது. இரண்டாவது மனுவையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துவிட்டதாக, ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.