லோக்சபா தேர்தல் பணி விமானப்படை அசத்தல்
லோக்சபா தேர்தல் பணி விமானப்படை அசத்தல்
லோக்சபா தேர்தல் பணி விமானப்படை அசத்தல்
ADDED : ஜூன் 13, 2024 01:39 AM

புதுடில்லி, நாட்டின் தொலைதுாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது, அதிகாரிகளை அழைத்துச் செல்வது என, லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு, இந்திய விமானப்படை முக்கிய பங்கு வகித்துள்ளது.
நாடு முழுதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. ஏப்., 19ல் துவங்கிய தேர்தல், ஜூன் 1ல் முடிந்தது. லோக்சபா தேர்தலை தங்கு தடையின்றி சுமுகமாக நடத்துவதற்கு, நம் விமானப்படை முக்கிய பங்காற்றி உள்ளது.
இது தொடர்பாக, நம் விமானப்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
லோக்சபா தேர்தலின் போது, விமானப்படையின், எம்.ஐ-., 17 வகை நடுத்தர லிப்ட் ஹெலிகாப்டர்கள், 'சேட்டாக்ஸ்' வகை இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக 'துருவ்' ஹெலிகாப்டர்கள் வாயிலாக, கடந்த சில மாதங்களாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏழு கட்ட தேர்தலில், ஐந்து கட்டங்களில் விமானப்படை முக்கிய பங்கு வகித்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை விமானத்தில் எடுத்துச் செல்வது, தேர்தல் கமிஷனின் பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது போன்ற பணிகளில் விமானப்படை தீவிரமாக ஈடுபட்டது.
நாட்டின் தொலைதுாரப் பகுதிகளிலும், சாலை வழியாகப் போக்குவரத்து பாதுகாப்பு குறைபாடுள்ள இடங்களிலும், விமானப்படை வாயிலாக தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1,750க்கும் மேற்பட்ட பயணங்களில், 1,000 மணி நேரத்துக்கு அதிகமாக விமானப்படையின் விமானங்கள் பறந்தன. மேலும், ராணுவம் மற்றும் பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படையின் ஹெலிகாப்டர்களும் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.