'சவுக்கு' தரப்பு ஆட்கொணர்வு மனு வழக்கமான முறைப்படி விசாரணை
'சவுக்கு' தரப்பு ஆட்கொணர்வு மனு வழக்கமான முறைப்படி விசாரணை
'சவுக்கு' தரப்பு ஆட்கொணர்வு மனு வழக்கமான முறைப்படி விசாரணை
UPDATED : ஜூன் 13, 2024 04:36 AM
ADDED : ஜூன் 13, 2024 01:52 AM

சென்னை:மகளிர் போலீசாரை விமர்சித்ததாக, 'யு டியூபர்' சவுக்கு சங்கருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில், அவர் கைது செய்யப்பட்டார்.
பின், கஞ்சா வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சங்கர் காவலில் வைக்கப்பட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சங்கரின் தாய், ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
மனு, விடுமுறை கால நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததை, ரத்து செய்து, நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
போலீஸ் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதித்து, இறுதி விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
இதனால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணைக்கு சென்றது.
ஆட்கொணர்வு வழக்கில், அரசு தரப்பில் பதில் அளிக்க உரிய சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கை ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜரானார்.
போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, ''கைதானவர் தரப்பில் அளிக்கும் மனுவை விசாரித்த, ஓய்வு நீதிபதிகள் அடங்கிய அறிவுரை குழுமம், இன்னும் தன் முடிவை தெரிவிக்கவில்லை. மேலும், இந்த வழக்கில் கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது,'' என்றார்.
சவுக்கு சங்கர் சிகிச்சை பெற, அவரை தற்காலிகமாக விடுவிக்கக் கோரி, இடைக்கால மனுத் தாக்கல் செய்திருப்பதாக, மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த ஆட்கொணர்வு வழக்கு, வழக்கமான நடைமுறைப்படி விசாரிக்கப்படும் என்பதால், அதன்படி பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இடைக்கால நிவாரணம் கேட்டு, புதிதாக அரசிடம் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.