பாக்., பயங்கரவாதிகளை பிடிக்க 'ட்ரோன்' வாயிலாக தேடுதல் வேட்டை
பாக்., பயங்கரவாதிகளை பிடிக்க 'ட்ரோன்' வாயிலாக தேடுதல் வேட்டை
பாக்., பயங்கரவாதிகளை பிடிக்க 'ட்ரோன்' வாயிலாக தேடுதல் வேட்டை
ADDED : ஜூன் 11, 2024 12:59 AM

ஜம்மு, ஜம்முவில், பக்தர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பிடிக்க போலீஸ், ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப்., படையினர், 'ட்ரோன்' வாயிலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சிவ் கோரி கோவிலில் இருந்து கத்ரா என்ற இடத்தை நோக்கி, பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.
தேர்யாத் என்ற கிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் மறைந்திருந்து பஸ்சை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுனர் விஜயகுமார், நடத்துனர் அருண் குமார் மற்றும் பயணியர் ஏழு பேர் உயிரிழந்தனர்.
இவர்களில், 2 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். மற்ற மூவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
காயம் அடைந்த 41 பேரில், 34 பேர் உ.பி.,யை சேர்ந்தவர்கள். ஐந்து பேர் டில்லி மற்றும் இருவர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். இதில், 10 பேர் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன.
அவர்களுக்கு ஜம்மு மற்றும் ரியாசியில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் பயங்கரவாதிகள் அல்ல என்பதும், அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பதும் தெரியவந்துஉள்ளது. இரண்டு முதல் மூன்று பேர் இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள், 'எம்4 கார்பைன்' மற்றும் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஜோரி, ரியாசி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் அவர்கள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ஐந்து குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும், கொடூர குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.