நியாய விலை கடையில் அதிகாரி திடீர் சோதனை
நியாய விலை கடையில் அதிகாரி திடீர் சோதனை
நியாய விலை கடையில் அதிகாரி திடீர் சோதனை
ADDED : ஜூன் 14, 2024 07:39 AM
பூதி கோட்டை: பூதி கோட்டையில் அரசின் நியாய விலை கடையில், கோலார் மாவட்ட உணவு பொது வினியோகத் துறை உதவி இயக்குனர் லதா திடீர் சோதனை நடத்தினார்.
பங்கார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பூதி கோட்டையில் உள்ள நியாய விலை கடையில், எடையளவு சரியில்லை. ஒரு சில நாட்கள் மட்டுமே உணவுப் பொருட்கள் வினியோகம் செய்கின்றனர்.
இதை தொடர்ந்து உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதாகவும், அடுத்த மாதம் பார்க்கலாம் என்று கூறி அனுப்பி விடுகின்றனர். ரேஷன் வாங்க வருவோரை தரக் குறைவாக பேசுகின்றனர் என, கோலார் மாவட்ட உணவு மற்றும் பொது வினியோகத் துறை அதிகாரிகளிடம் பலரும் புகார் செய்திருந்தனர்.
இதன்படி, கோலார் மாவட்ட உணவுத் துறை உதவி இயக்குனர் லதா, பூதி கோட்டை நியாய விலைக்கடையில் நேற்று திடீரென சோதனை நடத்தினார். புகாரில் குறிப்பிட்டிருந்த விபரங்கள் தொடர்பாக கடைக்காரரிடம் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு கடைக்காரர் சரியாக பதில் அளிக்கவில்லை.
'பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதால், ரேஷன் கடை நடத்த தகுதி இல்லை' என்று கண்டித்தார். அங்கு வந்த சில வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்படும் அநியாயத்தை நேருக்கு நேர் தெரிவித்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க போவதாக அதிகாரி உறுதி அளித்தார்.
உணவுத்துறை இன்ஸ்பெக்டர் அம்ஜத், கிராம பஞ்சாயத்து தலைவர் மஞ்சுநாத், விவசாய சேவைகள் கூட்டுறவுச் சங்க தலைவர் சீதாராமப்பா உட்பட பலர் உடன் சென்றனர்.