Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பல்லாரிக்கும், அமைச்சர் பதவிக்கும் ராசியில்லையா? பதவி காலத்தை நிறைவு செய்யாத 5 அமைச்சர்கள்!

பல்லாரிக்கும், அமைச்சர் பதவிக்கும் ராசியில்லையா? பதவி காலத்தை நிறைவு செய்யாத 5 அமைச்சர்கள்!

பல்லாரிக்கும், அமைச்சர் பதவிக்கும் ராசியில்லையா? பதவி காலத்தை நிறைவு செய்யாத 5 அமைச்சர்கள்!

பல்லாரிக்கும், அமைச்சர் பதவிக்கும் ராசியில்லையா? பதவி காலத்தை நிறைவு செய்யாத 5 அமைச்சர்கள்!

ADDED : ஜூன் 08, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
கடந்த 10 ஆண்டுகளில், பல்லாரியின் ஐந்து அமைச்சர்கள் சர்ச்சைக்கு ஆளாகி, பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

கர்நாடகாவின் பல்லாரி, இயற்கை வளங்கள் நிறைந்த மாவட்டம். வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள், புண்ணிய தலங்கள் இங்குள்ளன. பல சிறப்புகள் கொண்டுள்ள இம்மாவட்டம், சட்டவிரோத சுரங்க தொழிலால் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

'சுரங்க மாவட்டம்' என்றே அழைக்கப்படுகிறது. பல்லாரி மாவட்ட அரசியல் தலைவர்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஜனார்த்தன ரெட்டி, சந்தோஷ்லாட், பரமேஸ்வர் நாயக், ஸ்ரீராமுலு, நாகேந்திரா என, ஐந்து அமைச்சர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் சர்ச்சைக்குள்ளாகி, தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஜனார்த்தன ரெட்டி


கடந்த 2008ல் கர்நாடகாவில் பா.ஜ., அரசு இருந்தது. இந்த அரசில் சட்டவிரோத சுரங்க தொழில், பெரும் சர்ச்சைக்கு காரணமானது. சட்டவிரோத சுரங்க தொழிலை கண்டித்து, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தலைமையில், பெங்களூரில் இருந்து பல்லாரி வரை, காங்கிரஸ் பாத யாத்திரை நடத்தியது.

சட்டவிரோத சுரங்க தொழில் குறித்து, லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அளித்திருந்த அறிக்கை அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அன்றைய முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது அரசில் சுரங்கம், நில ஆய்வியல் துறை அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டியும் ராஜினாமா செய்தார்.

சட்டவிரோத சுரங்க தொழில் வழக்கில், சி.பி.ஐ.,யால் கைதான அவர், ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தார். இவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது. அதன்பின் அவரை, பா.ஜ., கண்டுகொள்ளவில்லை.

'கல்யாண கர்நாடக பிரகதி' என்ற பெயரில், தனி கட்சி துவங்கிய அவர், சட்டசபை தேர்தலில் கொப்பாலின், கங்காவதி தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது பா.ஜ.,வில் ஐக்கியமாகி உள்ளார்.

ஸ்ரீராமுலு


சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பான அறிக்கையில், அன்று அமைச்சராக இருந்த இவரது பெயரும் இருந்ததால், ஸ்ரீராமுலுவும் பதவி இழக்க நேரிட்டது. இவரும் கூட தனி கட்சி துவங்கினார். அதன்பின் பா.ஜ.,வுக்கு திரும்பினார். 2023 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த அவருக்கு, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பல்லாரி தொகுதியில் சீட் கிடைத்தது. இப்போதும் தோல்வி அடைந்துள்ளார். இவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என, ஆதரவாளர்கள் கவலையில் உள்ளனர்.

சண்டூர் காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த துக்காராம், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யானதால், சண்டூர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்கும். இதில் ஸ்ரீராமுலுவுக்கு சீட் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

சந்தோஷ் லாட்


கடந்த 2013ல் காங்கிரஸ் அரசு அமைந்தது. சித்தராமையா முதல் முறையாக முதல்வரானார். இவரது அமைச்சரவையில் சந்தோஷ் லாட், செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்தார். பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார்.

அமைச்சராக பதவியேற்ற ஆறு மாதங்களில், இவர் மீது சட்டவிரோத சுரங்க தொழில் செய்வதாக, வனப்பகுதியை நாசமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஹிரேமத் புகார் அளித்தார். எனவே சந்தோஷ் லாடிடம், முதல்வர் ராஜினாமா கடிதம் பெற்றார். தற்போதைய காங்கிரஸ் அரசில், தொழில் துறை அமைச்சராக சந்தோஷ்லாட் பதவி வகிக்கிறார்.

பரமேஸ்வர் நாயக்


கடந்த 2013ல், காங்கிரஸ் அரசில் பரமேஸ்வர் நாயக்குக்கு, அமைச்சராகும் அதிர்ஷ்டம் தேடி வந்தது. ஆனால் இவர் மீதும், சட்டவிரோத மணல் கடத்தல், மதுபான விற்பனை குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, பரமேஸ்வர் நாயக் மற்றும் கூட்லகியின் அன்றைய டெபுடி எஸ்.பி., அனுபமா ஷெனாய் இடையே, பெரும் விவாதம் ஏற்பட்டது.

மகளிர் போலீஸ் அதிகாரியை பற்றி, பரமேஸ்வர் நாயக், மொபைல் போனில் அவமதிப்பாக பேசிய ஆடியோ பரவி, சர்ச்சைக்கு காரணமானது. இவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வலியுறுத்தல் எழுந்ததால் பரமேஸ்வர் நாயக் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது.

நாகேந்திரா


இன்றைய காங்கிரஸ் அரசில், முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா. இவரது துறையின் கட்டுப்பாட்டில், வால்மீகி மேம்பாட்டு ஆணையம் செயல்படுகிறது. இதில் பணியாற்றிய அதிகாரி சந்திரசேகர், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு இவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், 'வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் கோடிக்கணக்கான ரூபாயை, சட்டவிரோதமாக வேறு துறைக்கு மாற்றும்படி, தனக்கு நெருக்கடி கொடுத்தனர்' என குறிப்பிட்டிருந்தார். முறைகேட்டில் அமைச்சர் நாகேந்திராவுக்கும் தொடர்பிருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சியான பா.ஜ., வலியுறுத்தியது. போராட்டம் நடத்துவதாக எச்சரித்தது. எனவே நாகேந்திரா அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்துள்ளார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us