முழுநேர அரசியல்வாதியாக மாறுகிறார் நிகில்
முழுநேர அரசியல்வாதியாக மாறுகிறார் நிகில்
முழுநேர அரசியல்வாதியாக மாறுகிறார் நிகில்
ADDED : ஜூன் 08, 2024 04:41 AM

மாண்டியா : தன் தந்தை குமாரசாமி, எம்.பி.,யானதை தொடர்ந்து, நடிப்புக்கு முழுக்கு போட, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் முடிவு செய்துள்ளார்; முழுநேர அரசியல்வாதியாக மாறுகிறார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், கன்னடத்தில் ஜாக்குவார் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்திருந்தார். அவை எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை.
இவரை அரசியலில் களமிறக்க தேவகவுடாவும், குமாரசாமியும் விரும்பினர். 2019 லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் ம.ஜ.த., சார்பில் நிகில் களமிறங்கினார். ஆனால், சுயேச்சை வேட்பாளர் சுமலதாவிடம் தோற்றார்.
சினிமா வேலை
லோக்சபா தேர்தலில் தோற்ற பின், சினிமா வேலைகளில் நிகில் ஆர்வம் காண்பித்தார். 2023 சட்டசபை தேர்தலில், ராம்நகர் தொகுதியில் போட்டியிட்டார். இது தேவகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் அரசியல் மறுவாழ்வு கொடுத்த தொகுதியாகும். இங்கு எளிதில் வெற்றி பெறலாம் என, ம.ஜ.த., தலைவர்கள் கருதினர். ஆனாலும், நிகில் தோற்றார்.
தொடர்ந்து தோல்வியை சந்தித்த இவர், அரசியலுக்கு முழுக்கு போடுவார். நடிப்பில் மட்டுமே ஆர்வம் காண்பிப்பார். இனி தேர்தலில் போட்டியிட மாட்டார் என, கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டது.
லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் குமாரசாமி களமிறங்கினார். நடிப்பை ஒதுக்கி, தந்தைக்காக நிகில் பணியாற்றினார். இவரும் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அமைச்சர் ஆவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஹாசன் எம்.பி.,யாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை, கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடாவின் அரசியல் வாரிசாக தொண்டர்கள் கருதினர். இம்முறை லோக்சபா தேர்தலிலும், இவருக்கு கட்சி சீட் கொடுத்தது. அவர் வெற்றிக்காக தொண்டர்கள் உழைத்தனர்.
இந்நிலையில், இவர் பெண்களை பலாத்காரம் செய்ததாக கூறப்படும், வீடியோக்கள் வெளியானது. இதனால் தர்மசங்கடத்துக்கு ஆளான மேலிடம், இவரை கட்சியில் இருந்து நீக்கியது.
ஆபாச வீடியோ
இந்த விவகாரத்தில் பணிப்பெண்ணை கடத்தியதாக அவரது தந்தை ரேவண்ணாவும் கைதானார். தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். சில நாட்களுக்கு முன்பு, பிரஜ்வல் பெங்களுரு திரும்பி, கைதானார். தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளார்.
ரேவண்ணா குடும்பத்தினரால், தேவகவுடா வருத்தத்தில் உள்ளார். கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டாலும், லோக்சபா தேர்தலில், மக்கள் ம.ஜ.த.,வை கைவிடவில்லை. போட்டியிட்ட மூன்று தொகுதிகளில், கோலார், மாண்டியாவில் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தற்போது நடந்த மேலவை தேர்தலிலும், கட்சி சாதனை செய்துள்ளது.
நடிப்புக்கு முழுக்கு
ம.ஜ.த.,வில் ரேவண்ணாவுக்கு, முன்பிருந்த செல்வாக்கு இனி இருப்பது சந்தேகம். குமாரசாமி தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார். கர்நாடகாவில் கட்சி பொறுப்பை, அவரது மகன் நிகில் ஏற்க வேண்டியிருக்கும். எனவே நடிப்புக்கு முழுக்கு போட, நிகில் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து, மாண்டியாவில் நிகில் நேற்று கூறுகையில், ''நடிப்பதை கைவிட முடிவு செய்துள்ளேன். நான் இனி முழு நேர அரசியல்வாதி. நடிப்பை விட்டு, கட்சி பணிகளில் ஈடுபடுவேன். குமாரசாமி மீது மக்கள் வைத்த நம்பிக்கையை தக்கவைப்பேன்,'' என்றார்.