அமைச்சரை கைது செய்ய ம.ஜ.த., போர்க்கொடி
அமைச்சரை கைது செய்ய ம.ஜ.த., போர்க்கொடி
அமைச்சரை கைது செய்ய ம.ஜ.த., போர்க்கொடி
ADDED : ஜூன் 08, 2024 04:44 AM

ராய்ச்சூர் : வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கில், அமைச்சர் போசராஜு, ஆணையத்தின் தலைவரான, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் ஆகியோரை கைது செய்ய, ம.ஜ.த., வலியுறுத்தி உள்ளது.
பெங்களூரு, வசந்த்நகரில் உள்ள வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் கண்காணிப்பாளராக இருந்தவர் சந்திரசேகர், 52. ஆணையத்தில் முறைகேடு நடப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மாதம் 27ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. சந்திரசேகர் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்று, பழங்குடியினர் நல அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வேண்டுமென கோரிக்கை எழுந்தது. நேற்று முன்தினம், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ராய்ச்சூர் மாவட்ட ம.ஜ.த., தலைவர் விருபாக் ஷி நேற்று அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டில், அந்த ஆணையத்தின் தலைவராக உள்ள, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தலுக்கும் தொடர்பு உள்ளது. அவரை கைது செய்ய வேண்டும்.
முறைகேடு செய்த பணத்தை, ஹைதராபாதிற்கு அனுப்பி வைத்து உள்ளனர். தெலுங்கானா லோக்சபா தேர்தலுக்கு, கர்நாடக பணம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, அம்மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்த, அமைச்சர் போசராஜுவிடம் விசாரித்து, அவரையும் கைது செய்ய வேண்டும்.
ஊழல் செய்யும் அரசுக்கு எதிராக, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம். அமைச்சர் பதவியை நாகேந்திரா ராஜினாமா செய்தாலும், இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை, நாங்கள் ஓயமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.