பா.ஜ.,விடம் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை: சட்டசபையில் முதல்வர் சித்தராமையா காரசாரம்
பா.ஜ.,விடம் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை: சட்டசபையில் முதல்வர் சித்தராமையா காரசாரம்
பா.ஜ.,விடம் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை: சட்டசபையில் முதல்வர் சித்தராமையா காரசாரம்
ADDED : ஜூலை 18, 2024 11:00 PM

பெங்களூரு: ''எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு பல நல திட்டங்களை கொண்டு வந்தது, என் ஆட்சி காலத்தில் தான். நான் இருக்கும் வரையிலும், சமூக நீதி கிடைக்க செய்வோம். எனவே, பா.ஜ.,வினரிடம் இருந்து சமூக பாடத்தை கற்க வேண்டிய அவசியம் இல்லை,'' என முதல்வர் சித்தராமையா, சட்டசபையில் தெரிவித்தார்.
கர்நாடக பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் அசோக், விதி எண்: 69ல் ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் இரண்டு நாட்களாக பேசினார். அவருக்கு ஆதரவாக பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பேசினர்.
அப்போது, 'முறைகேடுக்கு பொறுப்பேற்று, நிதித் துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்' என்று பா.ஜ.,வினர் வலியுறுத்தினர்.
முதல்வர் பதிலடி
இந்நிலையில், அரசு தரப்பில் முதல்வர் சித்தராமையா, சட்டசபையில் பதில் அளித்து பேசியதாவது:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் கணக்கு கண்காணிப்பாளர் சந்திரசேகர், கடந்த மே 26ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவர், தமிழகத்தின் போவி சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால், இவரை தலித், தலித் என்று எதிர்க்கட்சியினர் பலமுறை உச்சரித்தனர்.
ஆனால், நமது அரசியலமைப்பில், எஸ்.சி., - எஸ்.டி., என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகத்தில் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், வார்த்தைகள் மாற்றப்பட்டன. எஸ்.சி., - எஸ்.டி., இரு சமுதாயத்தினரும், 24.1 சதவீதம் மக்கள் தொகை உள்ளனர்.
நிதி கட்டாயம்
பொருளாதாரம், சமூகம், அரசியல், கல்வி ரீதியாக உயர வேண்டும் என்பதற்காக அச்சமுதாயத்தினருக்கு சட்டம் வகுக்கப்பட்டது. ஆனாலும், 70 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
முதன் முறையாக நான் முதல்வராக இருந்த போது, 2013 டிசம்பரில், அச்சமுதாய மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவது கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு முன் இருந்தது போன்ற சித்தராமையா, இப்போது இல்லை என்று பா.ஜ.,வின் பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார். எத்னாலும், வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தது போல் தற்போது இல்லை.
எதிர்க்கட்சி தலைவர் அசோக், 3 மணி நேரம் 4 நிமிடங்கள் பேசினார். அவர் பேசியது அனைத்தும், பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் மட்டுமே. பழங்குடியினர் நலனுக்காக வால்மீகி மேம்பாட்டு ஆணையம் கொண்டு வரப்பட்டது.
பா.ஜ.,வுக்கு அக்கறை இருந்திருந்தால், கர்நாடகாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய நிதி ஒதுக்கும் சட்டத்தை, தேசிய அளவிலும், அனைத்து மாநிலங்களிலும் ஏன் கொண்டு வரவில்லை.
இட ஒதுக்கீடு
அரசு ஒப்பந்தம் வழங்குவதில், எஸ்.சி., - எஸ்.டி.,களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது நாங்கள். கர்நாடக தொழில் மேம்பாட்டு ஆணையத்திலும் நிலம் ஒதுக்குவதில், இட ஒதுக்கீடு கொண்டு வந்தது நாங்கள்.
பா.ஜ., ஆட்சியில் ஏன் கொண்டு வரவில்லை. காங்கிரசும், நானும் இருக்கும் வரையிலும், சமூக நீதி கிடைக்க செய்வோம். எனவே பா.ஜ.,வினரிடம் இருந்து சமூக பாடத்தை கற்க வேண்டிய அவசியம் இல்லை.
சந்திரசேகர் தற்கொலைக்கு பின், அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.