ADDED : ஜூன் 24, 2024 11:37 PM
ஹிசார்: ஹரியானாவில் பூங்காவில் புதுமண தம்பதியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் படாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜ்வீர் சிங். இவர், அதே மாவட்டத்தின் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த மீனா என்பவரை காதலித்து வந்தார். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்தனர். இதற்கு, பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த ஜோடி, தங்கள் மணவாழ்க்கையை இனிதாக கழித்து வந்த நிலையில், நேற்று ஹன்சி நகரில் உள்ள பூங்காவிற்கு சென்றனர். அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள், புதுமண தம்பதியை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, புதுமண தம்பதியை சுட்டுக்கொன்றது யார்?
பெண்ணின் குடும்பத்தாருக்கு எதிராக திருமணம் செய்ததால், அவர்கள் நிகழ்த்திய ஆணவ கொலையாக இது இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.