Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மோடி, எதிர்கட்சியினரும் ஒத்திகை!

மோடி, எதிர்கட்சியினரும் ஒத்திகை!

மோடி, எதிர்கட்சியினரும் ஒத்திகை!

மோடி, எதிர்கட்சியினரும் ஒத்திகை!

UPDATED : ஜூன் 25, 2024 07:07 AMADDED : ஜூன் 24, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி : பத்து ஆண்டுகளாக பார்த்து வந்த பார்லிமென்ட் போல இந்த முறை இருக்காது என்பதற்கான அறிகுறிகள், நேற்று புதிய லோக்சபாவின் முதல் கூட்டத்தின் துவக்கத்திலேயே புலப்பட்டன. ஆளுங்கட்சியும், எதிர் அணியும் அரசியல் சாசனத்தின் பெயரால் மோதலுக்கு முன்னுரை எழுதியது சுவாரசியமாக இருந்தது.

லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை துவங்கியது. பெயர் தான் கூட்டத் தொடர். உறுப்பினர்கள் பதவி ஏற்பது மட்டுமே நேற்றைய அலுவல்.

முதல் முறையாக சிறுபான்மை ஆட்சியை பிறர் உதவியுடன் நடத்தும் நிலை வந்ததே என பாரதிய ஜனதா கட்சியினருக்கு வருத்தம் இருந்திருக்கலாம். அவர்கள் முகத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை.

உற்சாகம்


இண்டியா கூட்டணி நிலைமை நேர் எதிர். அவர்களே எதிர்பாராத வெற்றியை மக்கள் கொடுத்திருப்பதால் செம உற்சாகம்.

தேர்தலுக்கு முன் போட்ட சண்டைகளை மறந்து, சபைக்குள் ஒரே அணியாக நுழைவோம் என அறிவித்து, அதே போல ஒரு வாசலில் திரண்டு வந்தனர். அனைவரும் ஆளுக்கொரு புத்தகத்தை கையில் ஏந்தி வந்தனர். இந்திய அரசியல் சாசனம் அது.

அரசியல் சாசனத்தை அடியோடு மாற்ற மோடி திட்டமிட்டுள்ளார் என்பது இண்டியா அணியின் தேர்தல் கோஷங்களில் முதன்மையாக இருந்தது. அதன் நீட்சியாக லோக்சபா தொடரிலும் அந்த விஷயத்தை விவகாரமாக ஊதி பெரிதாக்க திட்டம் வகுத்துள்ளனர். பிரதமருக்கு தெரியாமல் போகுமா? பந்தை இண்டியா அணி பக்கம் திருப்பி விட்டார்.

அபூர்வமாக, சபை கூடுமுன் வெளியே செய்தியாளர்களை சந்தித்த மோடி, ''தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் மிக பிரமாண்டமான பெருமைக்குரிய வெற்றியை அளித்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு பின், மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் அமரும் அரசு என்ற பெருமையை எங்களுக்கு தந்துள்ளனர். இந்த அரசின் நோக்கங்கள், கொள்கைகள் மீது மக்கள் ஒப்புதல் முத்திரையை பதித்துள்ளனர். எனவே, மூன்று மடங்கு அதிக பொறுப்புடன் செயல்படுவோம்,'' என்றார்.

இண்டியா அணி கடுப்பாகி விட்டது. காங்கிரஸ் பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ் கொதித்தார். “பாரதிய ஜனதாவுக்கு குறைந்தபட்ச பெரும்பான்மையை கூட மக்கள் வழங்கவில்லை. மோடியே வாரணாசியில் தடுமாறி தான் ஜெயித்திருக்கிறார். மக்கள் தீர்ப்பின் அர்த்தத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை,” என்றார்.

குத்திக் காட்டினார்


ஆனால், மோடி அதோடு விடவில்லை. ''மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க பொறுப்பான எதிர்க்கட்சி அவசியம். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இந்த முறையாவது தங்கள் கடமையை ஒழுங்காக செய்து, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்,” என்று பேட்டியில் குத்திக் காட்டினார்.

இண்டியா அணி கோபத்தின் உச்சிக்கே போய்விட்டது. 'ஜனநாயகத்தை நாங்கள் காப்பாற்றுவதா... நாங்கள் பேச வேண்டிய வசனத்தை நீங்கள் பேசுவதா?' என்று எகிறினர் அதன் தலைவர்கள்.

''உயிரியல் ரீதியாக பிறக்காத நம் பிரதமர், இந்த தேர்தலில் தனிப்பட்ட முறையிலும், அரசியல் மற்றும் தார்மீக ரீதியாகவும் தோல்வி அடைந்துள்ளார். அவரது பேச்சில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். அவரது உண்மை முகத்தை இம்முறை வெளிப்படுத்துவோம்,” என்று ஜெய்ராம் ரமேஷ் சபதம் போட்டார்.

எதிர் அணி மட்டுமல்ல, ஆளும் தரப்பிலேயே எவரும் எதிர்பாராத அஸ்திரம் ஒன்றையும் மோடி ஏவினார்.

''நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட நினைவு தினம் இன்று வருகிறது. அன்று தான் நாமெல்லாம் கொண்டாடும் இந்திய அரசியல் சாசனம் துாக்கி எறியப்பட்டு, சட்டங்கள் மிதிக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாறியது. பார்லிமென்ட் வரலாற்றில் விழுந்த கரும்புள்ளி அந்த செயல்,'' என்றார் பிரதமர்.

திகைத்தனர்


இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இண்டியா அணி தலைவர்கள் திகைத்துப் போனது நிஜம்.

சிவசேனா உத்தவ் பிரிவு எம்.பி., அனில் தேசாய், ''அவசரநிலை காலம் எல்லாம் முடிந்து போன சங்கதி. பழங்கதைகள் பேசாமல் நிகழ்காலத்தில் மோடி கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

ஆசாத் சமாஜ் கட்சி எம்.பி., கன்ஷி ராம், ''மோடி ஆட்சியில் 140 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதை விடவா அவசரநிலை மோசமாக இருந்தது? இந்த முறையாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டும்,'' என்றார்.

அனுமதிக்க மாட்டோம்


முத்தாய்ப்பாக, ராகுல், “அரசியல் சாசனத்தின் மீது மோடி அரசு நடத்தும் தாக்குதல்களை இனிமேலும் நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. தவறுகளுக்கு பொறுப்பேற்காமல் அவர் நழுவ விட மாட்டோம்,” என்றார்.

மோடி, அமித் ஷா ஆகியோர் உறுப்பினர்களாக பதவி ஏற்றபோது, இண்டியா அணியினர் கையில் வைத்திருந்த அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

சபையின் முதல் வரிசையில் இடது கோடியில் பிரதமர் அமர்ந்திருந்தார். எதிரே, வலது கோடியில் இரண்டாவது ஆளாக ராகுல் அமர்ந்திருந்தார்.

மோடி பதவி ஏற்கும்போது ராகுல் புத்தகத்தை உயர்த்திக் காட்டி கோஷமிட்டதை நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடிந்தது. பிரதமரின் நேற்றைய பேச்சும், இண்டியா அணியின் எதிர்வினையும் பார்லி., கூட்டத்தொடரின் சுவாரசியத்தை கூட்டி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தமுறை கூட்டத் தொடரில் அனல் பறக்கப்போவது நிச்சயம். இரு தரப்பும் அதற்கான ஒத்திகையை நேற்று நடத்தி முடித்துள்ளதாகவே தெரிகிறது.

கருப்பு நாட்கள்!

கடந்த 1975, ஜூன் 25ல் பிரதமர் இந்திரா அவசரநிலை பிரகடனம் செய்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் என பா.ஜ., அறிவித்துள்ளது. .'ஜனநாயகத்தின் கருப்பு நாட்கள்' என்ற பெயரில் டில்லி பா.ஜ., தலைமையகத்தில் கட்சியின் தலைவர் நட்டா உரையாற்றுகிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us