எல்லை மீறி எம்.எல்.ஏ., மனைவி தலையீடு; பா.ஜ., - எம்.பி.,யை ஓரம் கட்டுவதால் சர்ச்சை
எல்லை மீறி எம்.எல்.ஏ., மனைவி தலையீடு; பா.ஜ., - எம்.பி.,யை ஓரம் கட்டுவதால் சர்ச்சை
எல்லை மீறி எம்.எல்.ஏ., மனைவி தலையீடு; பா.ஜ., - எம்.பி.,யை ஓரம் கட்டுவதால் சர்ச்சை
ADDED : மார் 11, 2025 11:16 PM

தார்வாட்; தார்வாட் ரூரல் சட்டசபை தொகுதியின், எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் காங்கிரசின் வினய் குல்கர்னி. ஆனால் இவரது மனைவி சிவலீலாவின் தலையீடு எல்லை மீறியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு அந்தந்த தொகுதி எம்.பி., மற்றும் மத்திய அமைச்சரை அழைக்க வேண்டும் என்பது விதிமுறை.
அதன்படி, ஹூப்பள்ளி - தார்வாட் எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான பிரஹலாத் ஜோஷிக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவரை அழைப்பதில்லை. சிவலீலா எந்த பணிகளுக்கும், தானே செல்கிறார். இதன் மூலம் ஒழுங்கை மீறுவதாக பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தார்வாடின் கரகா உட்பட, சில கிராமங்களில், நரேகா திட்டத்தின் பணிகள் துவக்கப்பட்டன. இதில் சிவலீலா, மத்திய அமைச்சரின் அனுமதி பெறாமல், தானே சென்று பூமி பூஜை செய்துள்ளார். அதிகாரிகளும் கூட, இவரது பேச்சை கேட்டு நடக்கின்றனர். தனக்கு பதிலாக மனைவியே எம்.எல்.ஏ., போன்று நடந்து கொள்வதை, அதிகாரத்தை காட்டுவதை வினய் குல்கர்னியும் கண்டு கொள்வது இல்லை.
நீதிமன்றம் உத்தரவு
தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பா..ஜ., கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், வினய் குல்கர்னி சிறைக்கு செல்ல நேரிட்டது. பல மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு, கீழ்மை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மறுக்கப்பட்டது.
அதன்பின் உச்ச நீதிமன்றத்தை நாடி, நிபந்தனை ஜாமின் பெற்றுக் கொண்டார். சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ வாய்ப்புள்ளதால், தார்வாட் மாவட்டத்துக்கு செல்ல கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனால் வினய் குல்கர்னியால், தார்வாடுக்கு செல்ல முடியவில்லை. 2023 சட்டசபை தேர்தலில் தார்வாட் ரூரலில் போட்டியிட்ட போதும், சமூக வலைதளங்கள் வழியாக பிரசாரம் செய்தார். இவருக்காக மனைவி சிவலீலா, கிராமம், கிராமமாக சுற்றி வந்து பிரசாரம் செய்தார். வினய் குமார் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எம்.எல்.ஏ., என்பதால், தொகுதி பணியை கவனிக்க வேண்டும். எனவே தார்வாடுக்கு செல்ல அனுமதி கேட்டார். ஆனால் நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன், இந்த விதிமுறை தளர்த்தப்பட்டதால் தொகுதிக்கு வருகிறார். ஆனால் பெயரளவுக்கு இவர் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறாரே தவிர, தொகுதி பணிகளை அவரது மனைவியே கவனிக்கிறார். இது காங்கிரசுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சருக்கும் மதிப்பு அளிப்பது இல்லை என, பா.ஜ., தொண்டர்களும், வினய் குல்கர்னி மீது கடுப்பில் உள்ளனர். தார்வாட் ரூரலுக்கு இவர் எம்.எல்.ஏ.,வா அல்லது அவரது மனைவியா என, கேள்வி எழுப்புகின்றனர்.