மருத்துவமனைகளில் அமைச்சர் திடீர் ஆய்வு
மருத்துவமனைகளில் அமைச்சர் திடீர் ஆய்வு
மருத்துவமனைகளில் அமைச்சர் திடீர் ஆய்வு
ADDED : ஜூன் 20, 2024 05:57 AM

பெங்களூரு; கித்வாய் மற்றும் இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் திடீர் வருகை தந்து ஆய்வு செய்தார்.
பெங்களூரின் கித்வாய், இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கவில்லை என, புகார்கள் வந்தன.
எனவே மருத்துவ நலத்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், நேற்று இவ்விரு மருத்துவமனைகளுக்கு, திடீர் வருகை தந்து ஆய்வு செய்தார்.
முதலில் கித்வாய் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர், வார்டுகளில் ஆய்வு செய்தார். நோயாளிகளை நலம் விசாரித்தார். மருத்துவமனையில் வசதிகள் எப்படி உள்ளன, எந்தெந்த சலுகைகளை பயன்படுத்துகின்றனர், எவ்வளவு நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறித்து, மருத்துவமனை நிர்வாக அதிகாரி மஞ்சுஸ்ரீ, இயக்குனர் லோகேஷ் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, எத்தனை நாட்கள் வேண்டும், புற்றுநோயை கண்டுபிடிக்க எத்தனை நாட்கள் ஆகின்றன, இறுதிகட்ட சிகிச்சைக்கு எத்தனை நாட்கள் ஆகும், நோயை கண்டுபிடித்த பின், எத்தனை நாட்களுக்கு பின், நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்கின்றனர், எந்த நேரத்தில் அதிகமான நோயாளிகள் வருகின்றன என, பல கேள்விகளை கேட்டார்.
அதன்பின் இந்திராகாந்தி குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று, அமைச்சர் ஆய்வு செய்தார். அந்தந்த வார்டுகளுக்கு சென்று, வசதிகளை பார்வையிட்டார். நோயாளிகளிடம் பிரச்னைகளை கேட்டறிந்தார். மருத்துவமனை அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தார்.
பின் அமைச்சர் கூறியதாவது:
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிகிச்சைக்காக பெங்களூருக்கு வர நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே துமகூரு, ஷிவமொகா, மாண்டியா, கார்வார் நகரங்களில் கித்வாய் போன்ற மருத்துவமனைகள் திறக்க, அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோன்று, கலபுரகியில் இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை திறக்க, அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவமனைகளின் பிரச்னைகளுக்கு, படிப்படியாக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.