குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பிறந்த நாள் கொண்டாட அரசு தடை
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பிறந்த நாள் கொண்டாட அரசு தடை
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பிறந்த நாள் கொண்டாட அரசு தடை
ADDED : ஜூன் 20, 2024 05:57 AM
பெங்களூரு; கர்நாடகாவின் அரசு உதவி பெறும், தனியார் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் மத நிகழ்ச்சிகளை அடுத்து, பணியாளர்கள், அதிகாரிகள், தனி நபர்களின் பிறந்த நாளை கொண்டாட, கர்நாடக மாநில அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில், பள்ளி, கல்லுாரிகளில் விடுமுறை நாட்களில் மத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது. அதேவேளையில், தேசிய விழாக்கள், மாநில விழா, ஜெயந்திகள் மட்டுமே கொண்டாட அனுமதி அளித்திருந்தது.
தற்போது மேலும் ஒரு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
அரசு உதவி பெறும், தனியார் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் ஊழியர்கள், அதிகாரிகள், தனியார், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மதகுருமார்கள் போன்றோர், தங்களுடைய பிறந்தநாளை கேக் வெட்டி, இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இம்மையங்களில் படிக்கும் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள், குழந்தை திருமணத்துக்கு ஆளாக்கப்பட்டவர்கள், பெற்றோரால் நிராகரிக்கப்பட்டவர்கள், தந்தை இல்லாதவர்கள், பிச்சை எடுப்பதில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தான் இங்கு சேர்க்கப்படுகின்றனர்.
சிறார் நீதி வாரியத்தின் உத்தரவின்படி, சமூகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவமானப்படுத்தப்படுவதால், குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் சேர்க்கப்பட்டு உள்ள குழந்தைகளின் மனதில் மகிழ்ச்சியை தரக்கூடிய ஆக்கபூர்வமான திட்டங்களை ஏற்பாடு செய்வது அவசியம்.
எனவே, குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் பிரபலங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது, நிறுவனத்தின் ஆடம்பரமான நிகழ்ச்சிகள் கொண்டாடுவதால், இங்குள்ள குழந்தைகள், தங்கள் பிறந்த நாளை இவ்வாறு கொண்டாட முடிவதில்லை என்று எங்குவர்.
இது, குழந்தைகளின் மனதில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இத்தகைய கொண்டாட்டங்கள், குழந்தைகளின் சுயமரியாதைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றன. எனவே, இம்மையங்களில் பிறந்த நாள் கொண்டாட தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.