குடிநீர் மாசு தடுக்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
குடிநீர் மாசு தடுக்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
குடிநீர் மாசு தடுக்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
ADDED : ஜூன் 20, 2024 05:52 AM

பெங்களூரு: ''இம்முறை மாநிலத்தில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், குடிநீர் மாசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அசம்பாவிதம் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்,'' என அதிகாரிகளுக்கு, கிராம பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே உத்தரவிட்டார்.
பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கில், நேற்று கிராம மேம்பாட்டு துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பிரியங்க் கார்கே ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
இம்முறை மாநிலத்தில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், குடிநீர் மாசுபாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அசம்பாவிதம் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், வாட்டர் மேன்கள் உள்ளிட்டோருக்கு தண்ணீரின் பரிசோதனை குறித்து உடனடியாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுங்கள்.
மாவட்ட அளவில் கிராம குடிநீர் வழங்கல் துறை செயல் அலுவலர்கள், தாலுகா உதவி செயலர்கள் வாரத்தில் ஒரு நாள் சென்று குடிநீர் வழங்கும் முறையை ஆய்வு செய்து, ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மாதந்தோறும் 2ம் தேதி நடக்கும் மாநில அளவிலான காணொலி கூட்டத்தில், இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்வேன். ஆழ்துளை கிணறுகளை சுற்றி உள்ள சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருத்தல், கழிவுநீர் கால்வாய்களில் குடிநீர் குழாய்கள் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
குடிநீர் குழாய்களின் ஓரத்தில், இறுக்கமான மூட்டைகள் அமைத்தல் போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் நீர் மாசுபடுவதை தடுக்கலாம்.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படக்கூடாது. மற்ற திட்டங்களைவிட, குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தாமதம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.