Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ அரசு வக்கீலை மாற்ற முதல்வருக்கு நெருக்கடி?

அரசு வக்கீலை மாற்ற முதல்வருக்கு நெருக்கடி?

அரசு வக்கீலை மாற்ற முதல்வருக்கு நெருக்கடி?

அரசு வக்கீலை மாற்ற முதல்வருக்கு நெருக்கடி?

ADDED : ஜூன் 20, 2024 05:51 AM


Google News
பெங்களூரு: நடிகர் தர்ஷன் கொலை வழக்கில், அரசு வக்கீலை மாற்ற கோரி முதல்வர் சித்தராமையாவுக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 17 பேரை, பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

இவர்களின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஒன்பது நாட்களாக விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு போலீசார் காவலில் எடுக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

டி.என்.ஏ., பரிசோதனை


இதனால், தர்ஷன் உட்பட 17 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று அடைக்கப்பட வாய்ப்புள்ளது. நேற்று மாலை 17 பேருக்கும் மருத்துவ பரிசோதனை, டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அரசு சார்பில் வாதாட, மூத்த வக்கீல் பிரசன்ன குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வாதாடும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்றுக் கொடுத்து விடுவார். இதனால், தர்ஷன் வழக்கிலிருந்து பிரசன்னகுமாரை விடுவிக்க வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு, சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியானது.

இது குறித்து சித்தராமையா நேற்று அளித்த பேட்டியில், ''தர்ஷன் வழக்கில் வாதாடும் அரசு வக்கீல் பிரசன்னகுமாரை மாற்றும் படி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாரும் எனக்கு அழுத்தம் தரவில்லை. இந்த வழக்கில் போலீசாரும், அரசு வக்கீலும் அவர்களின் வேலையை செய்து வருகின்றனர்,'' என்றார்.

118 பொருட்கள்


இதற்கிடையில், இந்த வழக்கில் சாட்சியங்களை சேகரிக்கும் வகையில், நடிகர் தர்ஷன் உட்பட 17 பேரும் அணிந்திருந்த உடைகள், ஷூ, ரேணுகாசாமியை தாக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி, பெல்ட் உட்பட 118 பொருட்களை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.

ரேணுகா சாமியை கொலை செய்த பின், அவரது உடலை ஷெட்டில் உள்ள காவலாளியின் அறையில் போட்டதும் தெரிந்தது. இதனால் காவலாளியிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல் பெற்றுள்ளனர்.

6 அதிகாரிகள்


இந்த வழக்கில் யாரையும் தப்ப விடக்கூடாது என, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். வழக்கு விசாரணை, மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரிஷ் தலைமையில் நடக்கிறது. விசாரணை அதிகாரியாக விஜயநகர் போலீஸ் உதவி கமிஷனர் சந்தன் உள்ளார்.

இந்நிலையில், சந்தனுக்கு உதவி செய்யவும், இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தவும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமாட்சி பாளையா கிரிஷ் நாயக், கோவிந்தராஜ் நகர் சுப்பிரமணியன், சந்திரா லே அவுட் பரத், காட்டன் பேட் எரிசாமி, கெங்கேரி சஞ்சீவ், அன்னபூர்ணேஸ்வரி நகர் சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் லிங்கராஜ் ஆகிய ஆறு பேர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனைவியிடம் ஆஜர்


ரேணுகாசாமியை கொலை செய்த பின்னர், பனசங்கரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், மனைவி விஜயலட்சுமி வீட்டிற்கு தர்ஷன் சென்றுள்ளார். கடந்த 9ம் தேதி விஜயலட்சுமி வீட்டில் நடந்த பூஜையில் பங்கேற்று உள்ளார். அதன்பின்னர் மைசூரு புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது.

இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி விஜயலட்சுமிக்கு, அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். இரண்டு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின், தர்ஷனை சந்தித்து அவர் பேசியதாகவும் தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us