மாயாவதி மருமகனுக்கு மீண்டும் பதவி: அரசியல் வாரிசாகவும் அறிவிப்பு
மாயாவதி மருமகனுக்கு மீண்டும் பதவி: அரசியல் வாரிசாகவும் அறிவிப்பு
மாயாவதி மருமகனுக்கு மீண்டும் பதவி: அரசியல் வாரிசாகவும் அறிவிப்பு
ADDED : ஜூன் 24, 2024 02:10 AM

லக்னோ: தன் மருமகன் ஆகாஷ் ஆனந்தை, மீண்டும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக்கிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, அவரை தன் அரசியல் வாரிசு என்றும் அறிவித்தார்.
அரசியல் வாரிசு
உத்தர பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை இருந்தவர், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அந்தக் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க, கட்சியின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பின், தன் சகோதரரின் மகனான ஆகாஷ் ஆனந்தை, 29, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக மாயாவதி மீண்டும் நியமித்தார். மேலும், அவரை தன் அரசியல் வாரிசு என்றும் அறிவித்தார்.
கடந்த மே மாதம் தான், தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஆகாஷ் ஆனந்தை, மாயாவதி நீக்கினார். மேலும், அவர் தன் அரசியல் வாரிசு அல்ல என்றும் அறிவித்திருந்தார். அரசியலில் முதிர்ச்சி பெறும் வரை, அவருக்கு பொறுப்பு தரப்படாது என்றும் அறிவித்திருந்தார்.
தனித்து போட்டி
உத்தர பிரதேசத்தில் மிகவும் வலுவாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சி, லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டது. கடந்த 2019 தேர்தலில், 10 இடங்களில் வென்ற நிலையில், இந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
மேலும், 2019 லோக்சபா தேர்தலில், 19.2 சதவீத ஓட்டுகளை பெற்ற நிலையில், இந்த தேர்தலில் ஓட்டு சதவீதம் 9.3 சதவீதமாக குறைந்தது.