மதுபான பெட்டிகள் திருட்டு நாடகமாடிய லாரி டிரைவர் கைது
மதுபான பெட்டிகள் திருட்டு நாடகமாடிய லாரி டிரைவர் கைது
மதுபான பெட்டிகள் திருட்டு நாடகமாடிய லாரி டிரைவர் கைது
ADDED : ஜூன் 14, 2024 07:43 AM
கலபுரகி: பெலகாவி ராய்பாகில் இருந்து 1.18 கோடி ரூபாய் மதிப்புள்ள, வெவ்வேறு பிராண்டுகளின் மதுபான பெட்டிகளுடன் ஒரு லாரி, பீதரின் கே.எஸ்.டி.சி.எல்., குடோனுக்கு, நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது.
இந்த லாரி நேற்று காலை 6:00 மணியளவில், கலபுரகியின் பரஹத்தபாத் கிராமம் அருகில் கவிழ்ந்து கிடந்தது. மதுபான பெட்டிகள் சிதறி கிடந்தன. இதை பார்த்த கிராமத்தினர், விபத்து நடந்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார், லாரி அருகில் படுத்திருந்த டிரைவரை விசாரித்தனர்.
அவர், 'இந்த வழியாக செல்லும் போது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க முயற்சித்தேன். லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரமாக கவிழ்ந்து விட்டது. சிதறி கிடந்த மதுபான பெட்டிகளை, பொது மக்களும், போலீசாரும் எடுத்து சென்றனர்' என கூறினார்.
தகவலறிந்து கலால் துறை அதிகாரிகள், அங்கு வந்து விபத்து குறித்து தகவல் சேகரித்தனர். ஆனால் விபத்து நடந்ததற்கான, எந்த அறிகுறிகளும் இல்லை. அதிகாலை 3:30 மணியளவில், விபத்து நடந்ததாக கூறுகிறார்.
இது குறித்து, போலீசாருக்கோ அல்லது லாரி உரிமையாளருக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. லாரி அருகில் படுத்து பொழுதை கழித்துள்ளார்.
டிரைவரின் நடவடிக்கையில், சந்தேகம் ஏற்பட்டதால் தீவிரமாக விசாரித்தனர், அவரது நாடகம் அம்பலமானது. பெலகாவியின், ராய்பாகில் இருந்து 1,100 பெட்டி மதுபானம் அனுப்பப்பட்டது.
இவற்றில் பாதியளவு மதுபான பெட்டிகளை, வழியில் விற்றுள்ளார். இது தெரிந்தால், சிறைக்கு செல்ல நேரிடும் என பயந்து, விபத்து நாடகத்தை அரங்கேற்றியது தெரிந்தது.
தற்போது 400 மதுபான பெட்டிகள் மட்டுமே லாரியில் இருந்தன. டிரைவரை கைது செய்து, விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, உயர்மட்ட விசாரணை நடத்த கோரி, கலபுரகி நகர் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுத, கலால் துறை முடிவு செய்துள்ளது.