ஐ.எஸ்., பயங்கரவாதி இலங்கையில்... கைது!
ஐ.எஸ்., பயங்கரவாதி இலங்கையில்... கைது!
ஐ.எஸ்., பயங்கரவாதி இலங்கையில்... கைது!
ADDED : ஜூன் 02, 2024 02:25 AM
கொழும்பு,: குஜராத்தில் பிடிபட்ட, நான்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தலைவராக கருதப்படும், முக்கிய பயங்கரவாதியை, இலங்கை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்., பல நாடுகளிலும் தங்களுடைய ஆதரவாளர்களை திரட்டி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த, நான்கு பயங்கரவாதிகளை, குஜ-ராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கடந்த மாதம், 19ம் தேதி ஆமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
விசாரணை
நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்த இந்த நான்கு பேரும், கொழும்பில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளனர். அங்கிருந்து, ஆமதாபாத் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், இந்தியாவின் பல நகரங்களில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இவர்களுடைய தொடர்புகள் குறித்து, குஜராத் போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த நாட்டுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இலங்கை போலீசாரும், இந்த வழக்கில் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த நான்கு பயங்கரவாதிகளுக்கும், இலங்கையைச் சேர்ந்த ஓஸ்மான் புஷ்பராஜா ஜெரார்டு, 46, என்பவர் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை, இலங்கை போலீசார் தேடி வந்தனர். அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு, 20 லட்சம் இலங்கை ரூபாய் பரிசாகவும் அறிவிக்கப்பட்டது.
இலங்கை
நீண்ட தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, ஐ.எஸ்., அமைப்பின், இலங்கைப் பிரிவின் முக்கிய தலைவரான ஓஸ்மானை, போலீசார் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இலங்கை போலீசாரின் சி.ஐ.டி., எனப்படும் குற்றப் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் உளவு அமைப்புகள் கூட்டாக நடத்திய விசாரணையில், அவர் குறித்த தகவல் கிடைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், இவரையும் சேர்த்து, இதுவரை ஆறு பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐ.எஸ்., அமைப்பின் கொடியை வடிவமைத்து தந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு செல்வதற்கு தயாராக இருந்த இரண்டு பயங்கரவாதிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஓஸ்மானிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக இலங்கை போலீசார், விரைவில் இந்தியா வந்து விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், இந்தியாவிலிருந்தும், பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் இலங்கை சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.