சல்மானை கொல்ல சதி: குற்றவாளிகள் வாக்குமூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் பகீர் வாக்குமூலம்
சல்மானை கொல்ல சதி: குற்றவாளிகள் வாக்குமூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் பகீர் வாக்குமூலம்
சல்மானை கொல்ல சதி: குற்றவாளிகள் வாக்குமூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் பகீர் வாக்குமூலம்
ADDED : ஜூன் 02, 2024 02:25 AM
மும்பை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை, மும்பையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்ய, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வசித்து வருகிறார். இவருக்கு நவி மும்பையில் உள்ள பன்வெல் பகுதியில் பண்ணை வீடு உள்ளது.
கடந்த 2022 மே மாதம், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டார். குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்தபடி திட்டம் வகுத்து, தன் கூட்டாளிகள் வாயிலாக, மூஸ்வாலாவை கொலை செய்தது தெரிய வந்தது.
துப்பாக்கிச் சூடு
இதே போல, நடிகர் சல்மான் கானையும் தீர்த்துக் கட்ட லாரன்ஸ் பிஷ்னோய் முடிவு செய்தார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்., 14ல், மும்பையின் பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டுக்கு வெளியே, மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய விக்கி குப்தா, சாகர் பால் ஆகியோரை, குஜராத்தில் மும்பை போலீசார் கைது செய்தனர்.
இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய சோனு பிஷ்னோய், அனுஜ் தாபன் ஆகியோர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனர். இதில் போலீஸ் ஸ்டேஷனில் சிறையில் இருந்த அனுஜ் தாபன் தற்கொலை செய்து கொண்டார்.
கைது
இந்நிலையில், பன்வெல் பகுதியில் உள்ள பண்ணை வீட்டுக்கு நடிகர் சல்மான் கான் வரும் போது, அவரை கொலை செய்ய, தாதா லாரன்ஸ் பிஷ்னோய் திட்டம் தீட்டி இருப்பதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், தனஞ்சய் தபேசிங், கவுரவ் பாட்டியா, வாஸ்பி கான், ரிஸ்வான் கான் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின்படி, போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள். சல்மான் கானை, அவரது பண்ணை வீட்டில் வைத்து அல்லது வீட்டிற்கு வரும் வழியில் காரை மறித்து கொலை செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, பாக்., தரகரிடம் இருந்து ஏ.கே., 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை வாங்குவதற்கு, சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய், அவரது உறவினர் அன்மோல் பிஷ்னோய், கூட்டாளி கோல்டி பிரார் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
பாதுகாப்பு
இவர்களுக்கு உதவியாக நவி மும்பையில் வசிக்கும் காஷ்யப் என்பவர் இருந்துள்ளார். இவர், வேறு சிலருடனும் தொடர்பில் இருந்துள்ளார். சல்மான் கானை கொல்பவர்களுக்கு, கனடாவில் இருந்து பணம் அனுப்பி வைக்க லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் திட்டமிட்டனர்.
சல்மான் கானை பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்து, தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு சென்று, கடல் வழியாக இலங்கை செல்லவும், அங்கிருந்து பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு செல்லவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த விவகாரத்தில் தற்போது, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 பேரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.