ஆயுள், மருத்துவ காப்பீடுக்கு ஜி.எஸ்.டி., வாபஸ் பெறக்கோரி 'இண்டியா' போராட்டம்
ஆயுள், மருத்துவ காப்பீடுக்கு ஜி.எஸ்.டி., வாபஸ் பெறக்கோரி 'இண்டியா' போராட்டம்
ஆயுள், மருத்துவ காப்பீடுக்கு ஜி.எஸ்.டி., வாபஸ் பெறக்கோரி 'இண்டியா' போராட்டம்
ADDED : ஆக 07, 2024 02:13 AM
புதுடில்லி,
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலுத்தப்படும் தவணைத் தொகைக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை திரும்பப்பெற வலியுறுத்தி 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான தவணை தொகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.
வலி யுறுத்தல்
இந்நிலையில், காப்பீடு திட்டங்கள் மீதான இந்த வரியை திரும்பப்பெற வலியுறுத்தி, சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியிருந்தார்.
வரிவிதிப்பு தொடர்பான ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இதே கோரிக்கையை காங்கிரஸ், திரிணமுல் காங்., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுக்கான, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ், திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, தேசியவாத காங்., சரத் சந்திரபவார் உள்ளிட்ட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய வரி பயங்கரவாதத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக கூறி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
விமர்சனம்
இதுகுறித்து சமூக வலைதளத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், 'ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களின் தவணை தொகை செலுத்த 18 சதவீதம் விதிப்பது மனிதாபிமானமற்ற செயல்' என, விமர்சித்துள்ளார்.
இதேபோல் சமூக வலைதளத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறுகையில், 'லட்சக்கணக்கான இந்திய மக்கள், சிறுகசிறுக சேர்த்த தங்களின் சேமிப்பு பணத்தின் வாயிலாக, மருத்துவ காப்பீடுக்கான தவணை தொகையை செலுத்தி வருகின்றனர்.
'அவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது' என, தெரிவித்துள்ளார்.