மகனை போன்றிருந்த மருமகனை இழந்துவிட்டேன்: பி.சி.பாட்டீல் உருக்கம்
மகனை போன்றிருந்த மருமகனை இழந்துவிட்டேன்: பி.சி.பாட்டீல் உருக்கம்
மகனை போன்றிருந்த மருமகனை இழந்துவிட்டேன்: பி.சி.பாட்டீல் உருக்கம்
ADDED : ஜூலை 10, 2024 04:15 AM

தாவணகெரே, : ''மகனை போன்றிருந்த என் மருமகனை இழந்ததை, என்னால் சகிக்க முடியவில்லை. என் வலது கையை இழந்தது போன்றுள்ளது,'' என, பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார்.
பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல். இவரது மூத்த மகள் சவும்யாவை, தாவணகெரேவின், கத்தலகெரே கிராமத்தைச் சேர்ந்த பிரதாப் குமார், 41, என்பவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.
பிரதாப் குமார், நேற்று முன் தினம் மதியம் தாவணகெரே, ஹொன்னாளி வனப்பகுதிக்கு காரில் வந்தார். சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, விஷம் குடித்தார்.
மயங்கிக் கிடந்த இவரை கவனித்த அப்பகுதியினர், மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருமகனின் இழப்பால், பி.சி.பாட்டீல் மனம் நொந்துள்ளார்.
தாவணகெரேவில், நேற்று அவர் அளித்த பேட்டி:
என் மருமகன் பிரதாப் குமார், மூத்த மகளின் கணவர். மகனை போன்றிருந்தார். என் வலது கையை போன்று திகழ்ந்தார். தோட்டம், வயல்களை அவரே நிர்வகித்து வந்தார். என் அரசியல் பணிகளுக்கும், உதவியாக இருந்தார். ஹிரேகெரூரில் எங்களுடன் வசித்து வந்தார்.
திருமணமாகி 15 ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை. இதனால் மனம் நொந்திருந்தார். இதே காரணத்தால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
இந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க, பெங்களூரின் டிஅடிக்ஷன் சென்டருக்கு அழைத்துச் சென்றேன். அதன்பின் சரியானார். செயற்கை முறையில் கருத்தரிப்பு மூலம், குழந்தை பெறவும் முடிவு செய்திருந்தார்.
நேற்று முன் தினம் காலை, சிற்றுண்டி சாப்பிட்ட பின், ஊருக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். ஆனால் தற்கொலை முடிவுக்கு வருவார் என, நாங்கள் நினைக்கவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.