Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே!

ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே!

ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே!

ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே!

ADDED : ஜூன் 03, 2024 04:09 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹைதராபாத் : ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான பொது தலைநகர் ஹைதராபாத் என்ற நடைமுறை முடிவுக்கு வந்தது. இனி வரும் காலங்களில், தெலுங்கானாவுக்கு மட்டுமே அந்நகரம் தலைநகராக விளங்கும்.

ஆந்திராவைப் பிரித்து, தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்கக் கோரி, 10 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, 2014ல் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, லோக்சபா தேர்தலுக்கு முன், 2014 பிப்ரவரியில், ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் - 2014ஐ பார்லிமென்டில் நிறைவேற்றியது.

இதன்படி, ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இவை, 2014 ஜூன் 2 முதல் அமலுக்கு வந்தன.

இந்த சட்டத்தின்படி, 10 ஆண்டுகளுக்கு மிகாமல், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு, பொது தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்றும், அந்த காலகட்டத்துக்குள் ஆந்திராவுக்கென தனி தலைநகர் உருவாக்கப்பட வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு பின், தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக ஹைதராபாத் விளங்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, 10 ஆண்டு கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது. இனி வரும் காலங்களில், தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக ஹைதராபாத் இருக்கும். எனினும், ஆந்திரா -- தெலுங்கானா இடையே சொத்துப் பகிர்வு போன்ற பல பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

ஆந்திராவில், 2014 - 2019 வரை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, அமராவதியை தலைநகராக்க முயற்சி எடுத்தாலும், அவருக்கு பின், 2019 - 2024 மே வரை ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மூன்று தலைநகரங்கள் என்ற திட்டத்தை அறிவித்தார். எனினும், ஆந்திராவுக்கு தலைநகர் கிடைத்தபாடில்லை.

ஆந்திர சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், வெற்றி பெறும் கட்சி, தலைநகர் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us