Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/விமானங்கள் நடுவானில் குலுங்க பருவநிலை மாறுபாடும் காரணம்

விமானங்கள் நடுவானில் குலுங்க பருவநிலை மாறுபாடும் காரணம்

விமானங்கள் நடுவானில் குலுங்க பருவநிலை மாறுபாடும் காரணம்

விமானங்கள் நடுவானில் குலுங்க பருவநிலை மாறுபாடும் காரணம்

ADDED : ஜூன் 03, 2024 04:19 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன் : விமானங்கள் நடுவானில் திடீரென குலுங்குவதற்கு, பருவநிலை மாறுபாடு பிரச்னையும் ஒரு காரணமாக இருக்கலாம் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீப காலமாக, நடுவானில் விமானங்கள் திடீரென குலுங்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. கடந்த மாதம், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற, சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் விமானம் இது போல் நடுவானில் குலுங்கியது. இதில், ஒரு பயணி உயிரிழந்தார்; மேலும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகமாக நடக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, சி.ஏ.டி., என்ற 'கிளியர் ஏர் டர்புலன்ஸ்' எனப்படும் தெளிவான வானிலை கொந்தளிப்பு. அதாவது வானில் மேகமூட்டமாக இருப்பது, குறிப்பிட்ட பகுதியிலுள்ள சீதோஷ்ண நிலை உள்ளிட்டவற்றை கணித்தே, விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ஆனால், சி.ஏ.டி.,யில் இவ்வாறு எந்த அறிகுறியும், முன்னெச்சரிக்கையும் இருக்காது. வானம் தெளிவாக இருக்கும். ரேடார்களிலும் இது சிக்காது. வானில் வெப்பநிலை மாற்றம், பிற காரணிகளால், காற்றின் வேகம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம்.

இதுபோன்ற இயற்கையான நிகழ்வு ஏற்படும்போது, அந்தப் பகுதி வழியாகச் செல்லும் விமானங்கள் சிக்கினால், அது பெரிய அளவில் குலுங்கும். உயரத்தில் பறக்கும்போது, விமானத்தில் பயணிப்போர், பெல்ட் அணியத் தேவையில்லை. இது போன்ற நேரத்தில் விமானம் குலுங்கும்போது, பயணியருக்கு காயம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கிழக்கு ஏங்கலியா பல்கலையின் பருவநிலைத் துறை பேராசிரியர் மனோஜ் ஜோஷி கூறியுள்ளதாவது: குறிப்பிட்ட உயரத்தில் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் தான் சி.ஏ.டி., ஏற்படுகிறது. இதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால், சில நேரங்களில் பயணியருக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

அதனால், எப்போதும் 'சீட் பெல்ட்' அணிந்திருப்பது பாதுகாப்பானதாகும். மேலும், சி.ஏ.டி., போன்ற சூழலின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சி, விமானி மற்றும் விமானத்தில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். பயணியரை எப்படி எச்சரிப்பது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்த சி.ஏ.டி., நீண்ட காலமாக இருந்தாலும், தற்போது அதிகளவில் நடக்கிறது. இதற்கு அதிகளவில் விமானங்கள் தற்போது பறப்பதால், அதிக எண்ணிக்கையில் இதை சந்திக்க வேண்டியுள்ளது. பருவநிலை மாறுபாடு பிரச்னையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இதுகுறித்து தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

22 மணி நேரம் தாமதம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் டில்லி -- வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கோவர் இடையேயான விமானம், நேற்று முன்தினம் காலை 5:30 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், விமானத்தில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டன. மேலும், விமானிகளின் பணி மாற்றம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, 22 மணி நேர தாமதத்துக்குப் பின், நேற்று காலை 3:15க்கு அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
கடந்த ஒரு வாரத்தில், தொலைதுார விமான சேவைகளில், மூன்றாவது முறையாக இதுபோன்று மிகவும் தாமதமாக ஏர் இந்தியா விமானங்கள் புறப்பட்டன. இதேபோல், ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து நேற்று மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு வந்த விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி எழுந்தது.
இதையடுத்து, அந்த விமானம் மும்பையில் தரையிறங்கியபோது விமான நிலையம் முழுதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, அதில் இருந்த 306 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை சோதனையிட்டபோது, வெடிகுண்டு இருப்பதாகக் கூறப்பட்டது புரளி என தெரிய வந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us