Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கருத்து கணிப்புகளால் 'இண்டியா' கூட்டணி கோபம்! பா.ஜ.,வின் உளவியல் விளையாட்டு என ஆவேசம்

கருத்து கணிப்புகளால் 'இண்டியா' கூட்டணி கோபம்! பா.ஜ.,வின் உளவியல் விளையாட்டு என ஆவேசம்

கருத்து கணிப்புகளால் 'இண்டியா' கூட்டணி கோபம்! பா.ஜ.,வின் உளவியல் விளையாட்டு என ஆவேசம்

கருத்து கணிப்புகளால் 'இண்டியா' கூட்டணி கோபம்! பா.ஜ.,வின் உளவியல் விளையாட்டு என ஆவேசம்

ADDED : ஜூன் 03, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி : 'வெளியாகி இருக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தல் முறைகேடுகளை நியாயப்படுத்தும் பா.ஜ.,வின் உளவியல் விளையாட்டு, இது முற்றிலும் போலியானது' என, காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இது மோடியின் ஊடக கணிப்பு என்றும், 295 இடங்களில் 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறுவது உறுதி எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் முடிவடைந்த ஜூன் 1ம் தேதி மாலை, பல்வேறு ஊடகங்களும் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அனைத்து முடிவுகளும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றே தெரிவித்து இருந்தது.

'இண்டியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா' கருத்துக் கணிப்பில், தே.ஜ., கூட்டணிக்கு 361 - 401 இடங்கள் கிடைக்கும் என்றும், 'இண்டியா' கூட்டணிக்கு, 131 - 166 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

'ஏபிபிசி ஓட்டர்' வெளியிட்ட கணிப்பில், பா.ஜ., கூட்டணிக்கு 353 - 383 இடங்களும், இண்டியா கூட்டணிக்கு 152 - 182 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது.

இந்த முடிவுகளை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டில்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களிடம் ராகுல் பேசுகையில், ''இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு அல்ல; இது மோடி ஊடகங்களின் கணிப்பு. இது அவரின் கனவை பிரதிபலிக்கும் கணிப்பு,'' என்றார்.

இண்டியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற கேள்விக்கு, ''பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் 295 என்ற பாடலை கேட்டுள்ளீர்களா? நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம்,'' என்றார்.

தேர்தல் முறைகேடு


காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கருத்துக்கணிப்புகள் முற்றிலும் போலியானது. நாளைய தினம் வெளியேறப்போகும் மனிதரால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. அவர் வெளியேறுவதை யாராலும் தடுக்க முடியாது.

இது ஒருவிதமான அழுத்தம் கொடுக்கும் தந்திரம். வெளியேறப்போகும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆடியுள்ள உளவியல் விளையாட்டு. நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளோம். மோடி தான் மீண்டும் பிரதமராக உள்ளார் என்பதை கூறுவதன் வாயிலாக, நாட்டின் நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரிகளுக்கு அவர்கள் சமிக்ஞை அளிக்கின்றனர். ஒருவித அழுத்தத்தை அளிக்கின்றனர்.

நியாயமான ஓட்டு எண்ணிக்கையை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் இந்த அழுத்தத் தந்திரங்களுக்கு பயப்படவும், அச்சப்படவும் மாட்டார்கள் என நம்புகிறோம். கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான பின், 150க்கும் அதிகமான கலெக்டர்களை தொலைபேசியில் அழைத்து அமித் ஷா பேசியுள்ளார்.

தேர்தல் முறைகேடுகளை நியாயப்படுத்த பா.ஜ., செய்துள்ள பகிரங்க முயற்சியே இந்த கருத்துக்கணிப்பு. இதன் வாயிலாக, ஓட்டு எண்ணிக்கையின் போது காங்., தொண்டர்கள் உற்சாகம் இழக்கச் செய்வதே அவர்களின் திட்டம். ஆனால், காங்., தொண்டர்கள் அதிக உத்வேகத்துடன் களத்தில் பணியாற்றுவர்.

உறுதியான நடவடிக்கை


ஓட்டு எண்ணும் மையத்தில், வேட்பாளர்களின் முகவர்கள், உதவி தேர்தல் அதிகாரியின் மேஜை அருகே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தகவல் அறிந்து, எங்கள் கட்சி பொருளாளர் அஜய் மாக்கன் அதுகுறித்து முறையிட்டுஉள்ளார்.

தேர்தல் அலுவலகத்திலும் நாங்கள் முறையிட்டுள்ளோம். இதுபோன்ற 117 புகார்களை தேர்தல் கமிஷனில் அளித்துள்ளோம். அதன்மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் கமிஷன் சார்பின்றி செயல்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தவறாக வழிநடத்துவதா?


ஏற்கனவே, இதேபோல வெளியான கருத்துக் கணிப்புகள் பலவும், தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. டில்லியில் அனைத்து தொகுதிகளிலும் 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும்.

- சஞ்சய் சிங்,, எம்.பி., - ஆம் ஆத்மி

ஏற்கனவே தயாரிக்கப்பட்டது!


ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களால் பல மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டது தான், இந்த கருத்துக்கணிப்பு. பொதுமக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். உண்மையில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளன்று, 'இண்டியா' கூட்டணியினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

- அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us