கிராமப்புற சாலைகள் மேம்பாடு: நெடுஞ்சாலை துறை தனிகவனம்
கிராமப்புற சாலைகள் மேம்பாடு: நெடுஞ்சாலை துறை தனிகவனம்
கிராமப்புற சாலைகள் மேம்பாடு: நெடுஞ்சாலை துறை தனிகவனம்
UPDATED : ஜூன் 03, 2024 06:17 AM
ADDED : ஜூன் 03, 2024 04:49 AM

சென்னை : கிராமப்புற போக்குவரத்தை எளிதாக்குவதற்காக, மாவட்ட இதர சாலைகளை மேம்படுத்தும் பணிகளில், தமிழக நெடுஞ்சாலைத் துறையினர் தனிகவனம் செலுத்தவுள்ளனர்.
மாநில நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 11,279 கி.மீ., நெடுஞ்சாலைகள், 11,626 கி.மீ., மாவட்ட முக்கிய சாலைகள், 41,052 கி.மீ., மாவட்ட இதர சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட தலைமையிடங்கள், முக்கிய நகரங்கள், தொழில் பகுதிகள், சுற்றுலா தலங்களை மாநில நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
கிராமப்புறங்களில் உள்ள சந்தைகள், வட்ட தலைமையிடம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், மாவட்ட இதர சாலைகள் உள்ளன. மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் பராமரிப்பு சிறப்பாக உள்ளது.
ஆனால், மாவட்ட இதர சாலைகளை, பல மாவட்டங்களில் மேம்படுத்த வேண்டியுள்ளது. அதிக கி.மீ.,யில் இந்த சாலைகள் உள்ளதால், அவற்றை மேம்படுத்த, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது.
இச்சாலைகளை மேம்படுத்தினால், கிராமப்புற போக்குவரத்து எளிமையாக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதாரம் பெருகும்.
எனவே, இதை கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில், இச்சாலைகளில் தனிகவனம் செலுத்துமாறு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார். அதற்கு தேவையான நிதியாதாரங்களை, துறைக்கான மானிய கோரிக்கையில் ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு முதல்வரும் ஒப்புதல் அளித்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, நடப்பு ஆண்டில் மேம்படுத்தவுள்ள சாலைகள் பட்டியலை தயாரித்து வழங்கும்படி, நெடுஞ்சாலைத் துறையினருக்கு அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார். சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் விரைவில் துவங்கவுள்ள நிலையில், மாவட்ட இதர சாலைகள் மேம்பாடு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
கிராமப்புற மக்களை கவரும் வகையில், மழைநீர் கால்வாய், நடைபாதை, தெரு மின்விளக்குகள் வசதியுடன், இந்த சாலைகளை முழுமையாக மேம்படுத்த திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.